தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனுக்கு பிடியாணை

319 0

44தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் என அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட எமில்காந்தனுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளது

ராடா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கு இன்றைய தினம் நீதிபதி குசல சரோஜினி வீரவர்தன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவருக்கு இந்த பிடியாணை உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராடா எனப்படும் மீள்கட்டுமாண மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தில் 200 மில்லியன் ரூபா சுனாமி நிதியை மோசடி செய்தமை தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ராடா நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிரான் அலஸ், எமில்காந்தன்  ராடாவின் முன்னாள் நடவடிக்கை பிரிவு தலைமை அதிகாரி சாலிய விக்ரமசுரிய, கலாநிதி ஜயந்த டயஸ் சமரசிங்க ஆகிய நால்வரும் இந்த வழக்கில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாவதை எமில்காந்தன் தொடர்ந்தும் தவிர்த்துவரும் நிலையில் இன்று அவருக்கு சர்வதேச பிடியாணை உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு பாரிய அழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்தத்தை தொடர்ந்து வீடமைப்பு திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் கோவை மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நான்கு சந்தேகநபர்களுக்கும் எதிராக சட்டமா அதிபர் குற்றபத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்தார்