பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெறும் என பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள், துறைமுக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தாக்குதல் மேற்கொண்டிருந்தார்.
கடற்படை தளபதி ஊடகவியலாளரை தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்ற நிலையில் குறித்த சம்பவம் ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, கடற்படை தளபதி ஊடகவியலாளரை தாக்கிய சம்பவத்திற்கு எதிராக நீதி கோரி கொழும்பில் தற்போது ஊடகவியலாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது