மலேசிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின்பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மலேசியா புறப்பட்ட ஜனாதிபதி இன்று மலேசிய நேரப்படி பிற்பகல் 2.10 மணிக்கு கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
மலேசிய அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் மனிதவள அபிவிருத்தி அமைச்சர் , பிரதிநிதிகள் ஜனாதிபதியை வரவேற்றனர். இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இந்த வரவேற்பு இடம்பெற்றது. இரண்டு நாடுகளினதும் நீண்டகால நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் விமானநிலைய வளாகத்தில் இரண்டு நாடுகளினதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
இதேவேளை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் மலேசிய மனிதவள அபிவிருத்தி அமைச்சருக்குமிடையே சுமுகமான சந்திப்பொன்றும் விமானநிலைய வளாகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதியின் இவ்விஜயத்தின் நோக்கம் இலங்கைக்கும் மலேசியாவுக்குமிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தி புதிய உறவுகளைக் கட்டியெழுப்புவதாகும்.
இரண்டு நாடுகளினதும் முதலீட்டாளர்கள் பங்குபற்றும் வர்த்தக மாநாடு இன்று பிற்பகல் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி சிறிசேனவும் கலந்துகொள்ளவுள்ளார்.
இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் விழா இன்று பிற்பகல் ஜனாதிபதி சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
அதனோடு இணைந்ததாக இடம்பெறும் கலாசார நிகழ்வு மற்றும் உணவு விழாவையும் ஜனாதிபதி பார்வையிடவுள்ளார்.
மலேசியாவுக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது ஜனாதிபதி மலேசியாவின் மன்னர் சுல்தான் முஹம்மத் மற்றும் பிரதமர் நஜிப் பின் அப்துல் ரஸ்ஸாக் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.