இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய்வதில் இலங்கை தோல்வியடைந்துள்ளதன் ஊடாகவும் ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகியதன் மூலமும் இலங்கை அரசாங்கம் நேர்மையான முறையில் உள்ளக ரீதியில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான கதவை மூடிவிட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஜெனிவாவில் தெரிவித்தார்.
எனவே இலங்கை அரசாங்கம் தொடர்ந்து இவ்வாறு பொறுப்புக்கூறலில் தோல்வியைக் கண்டுள்ளதால் சர்வதேச ரீதியில் இலங்கையின் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான மாற்றுவழியை உறுப்பு நாடுகள் ஆராய வேண்டும் என்றும் ஐ.நா. ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் இலங்கை தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. இதன்போது ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்: இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை உத்தியோகபூர்வமாக பேரவையில் தாக்கல் செய்தார். அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு உரையாற்றும் போது இந்த விடயங்களை மனித உரிமை ஆணையாளர் வெளிப்படுத்தினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
இலங்கையைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான ஒரு கட்டத்தில் இருக்கின்றோம். என்னுடைய அறிக்கை வெளிக்காட்டியுள்ளதன் பிரகாரம் கிட்டத்தட்ட கடந்த 12 வருடங்களாக பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான உள்ளக ரீதியான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக தோல்வியையே சந்தித்திருக்கின்றன.
2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் கூட உண்மையான நேர்மையான உண்மையை கண்டுபிடித்தல் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தோல்வி கண்டிருக்கின்றது.
கடந்த ஒரு வருட காலமாக இலங்கையில் எவ்வாறான தடையை ஏற்படுத்தும் விடயங்கள் இடம் பெற்றுக் கொண்டு வருகின்றன என்பதையும் மோசமான நிலைமை சில விடயங்களில் ஏற்படும் என்பதையும் எனது அறிக்கை எடுத்துக் காட்டியிருக்கிறது.
சிவில் சமூகம் மற்றும் சுதந்திர ஊடகத்துக்கான இடைவெளி தற்போது பாரிய நெருக்கடியை சந்தித்திருக்கிறது.
சுயாதீன நீதித்துறை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் 20ஆவது திருத்தச் சட்டம் காரணமாக வலுவிழந்திருக்கின்றன. சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தினரின் பங்களிப்பு அதிகரித்திருக்கிறது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பல்வேறு அநீதிகளைச் சந்தித்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு விடயங்களில் புறக்கணிக்கப்படுகின்றனர்.
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை கட்டாயமாக எரிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தால் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகம் பாரிய வலியை சுமந்து கொண்டிருக்கின்றது அதுமட்டுமன்றி கடந்த காலங்களில் இடம்பெற்றதை போன்ற மீறல்கள் மீண்டும் இடம்பெறுவதற்கான சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
இலங்கையின் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட அனைத்து ஆணைக்குழுக்களும் நம்பகரமான முறையில் உண்மையை கண்டுபிடிப்பதற்கும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் தவறியிருக்கின்றன. அதுமட்டுமன்றி முக்கியமான சில மனித உரிமை மீறல் தொடர்பான சம்பவங்களில் விசாரணைகளில் அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
அண்மையில் இலங்கை அரசாங்கம் ஒரு ஆணைக்குழுவை நியமித்திருக்கிறது. அந்த ஆணைக்குழுவும் கடந்த காலங்களில் ஏனைய ஆணைக்குழுக்களை போன்று அர்த்தமுள்ள விளைவுகளை ஏற்படுத்தாத ஒரு பழைய கதைதையே மீண்டும் கொண்டு வருவதாக இருக்கும்.
அரசாங்கம் இவ்வாறு தொடர்ச்சியாக கடந்த கால மீறல்கள் தொடர்பாக ஆராய்வதில் தோல்வி கண்டு வருவதன் ஊடாகவும் 30 -1 என்ற தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியதன் மூலமும் நேர்மையான முறையில் முன்னேற்றத்தை காண்பதற்கான கதவை அரசாங்கம் முழுமையாக மூடிவிட்டுள்ளது என்பதை நாங்கள் இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.
இதனால் இலங்கையில் பொறுப்புக்கூறலை ஏற்படுத்துவதற்கான சர்வதேச மாற்று வழிமுறைகளை ஆராய வேண்டும் என்று நான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுக்கின்றேன். இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் தொடர்பான செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கு எனது அலுவலகம் எப்போதும் தயாராகவே இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.