முஸ்லிம் சமூகத்துக்குச் சொந்தமான மாளிகாவத்தை மையவாடிக்காணி 37 ஏக்கரில் 26 ஏக்கர் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளது. தற்போது 11 ஏக்கர்களே எஞ்சியுள்ளன. 4,25,000 முஸ்லிம்களுக்குரிய மையவாடிக்காணியை பாதுகாத்துக் கொள்ள
முன்வருமாறு மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனம் முஸ்லிம் சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்கு சொந்தமான காணியை அபகரித்து நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி தனியார் நிறுவனமொன்று 8 மாடிக் கட்டிடமொன்றை நிர்மாணித்து வருகின்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது குறித்த ஆர்ப்பாட்டத்தினை மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதும் உரிய வகையான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை. நீதி மன்றின் தடை உத்தரவையும் மீறி தனியார் நிறுவனம் தமது கட்டிட விஸ்தரிப்பை மேம்படுத்தி வருகின்றது.
மாளிகாவத்தை மையவாடிக் காணியை பாதுகாப்பதற்காக இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கம் கடந்த 15 வருடங்களாக போராடி வருகிறது. நீதிமன்ற உத்தரவினையும் மீறி முன்னைய அரசாங்கத்தின் உயர் பீடங்களின் ஒத்துழைப்புடன் 8 மாடிக் கட்டிட நிர்மாணம் சிறப்பாக நடந்து வருகின்றது.
தற்போது அருகிலுள்ள மின்மாற்றியை அவ்விடத்திலிருந்து அகற்றி மையவாடிக்காணிக்கு இடமாற்றுவதற்கு நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கம், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம்
மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனம், இணைந்து மேற்கொண்ட எதிர் நடவடிக்கையினால் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இச்சதித்திட்டங்களுக்கு ஆதரவாக கொழும்பு மாநாகர சபை ஆணையாளர் வி.கே.ஏ.அநுர செயற்படுவதோடு இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்மாற்றியை அவ்விடத்திலிருந்து அகற்றி மையவாடி காணிக்குள் நிறுவுவதற்கு அனுமதியைவழங்கியுள்ளார். மாநகரசபை சட்டவிரோத கட்டடத்துக்கு எதிராக தொடர்ந்திருந்த வழக்கினையும் வாபஸ் பெற்றுள்ளார்.
கொழும்பு மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி ஜும்ஆ தொழுகைக்குப் பின்பு தெமட்ட மரத்தடி ஜும்ஆ பள்ளிவாசலில் இருந்து சென்று கொழும்பு மாநகர சபை டவுண் ஹோல் கட்டடத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.
இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களின் உரிமைக்காகவும் நடத்தப்படும் இந்த நல்ல ஆர்ப்பாட்டத்திற்கு ஜமா அத்தாராகிய உங்களது பூரண ஒத்துழைப்பை வேண்டுகிறோம் என மாளிகாவத்தை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஷியாம் அசார் தெரிவித்துள்ளார்