நாமக்கல் மண்டலத்தில் நவம்பர் மாதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான முட்டைகளின் எண்ணிக்கை 3.68 கோடியாக உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 4 கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த முட்டைகள் கேரள மாநிலத்துக்கு 90 லட்சம், தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு 50 லட்சம், வெளிநாடுகளுக்கு 40 லட்சம் என அனுப்பப்படுகிறது.
இதர முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வட மாநிலங்களுக்கும விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தற்போது இதே நிலை நீடித்தாலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தினசரி முட்டையின் அளவு நாளுக்கு நாள் சரிவடைந்து வந்தது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி நாமக்கல் மண்டலத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 1.27 கோடி, ஜூலை மாதம் 75 லட்சம், ஆகஸ்ட் மாதம் 2.59 கோடி, செப்டம்பர் மாதம் 2.73 கோடி முட்டைகள் வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால், கடந்த அக்டோபர் மாதம் ஏற்றுமதியான முட்டைகளின் எண்ணிக்கை 1.84 கோடியாக குறைந்தது. இதனால் பண்ணையாளர்கள் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில், நவம்பர் மாதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான முட்டைகளின் எண்ணிக்கை 3.68 கோடியாக உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.