வார்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகளில் 20 ஆயிரம் பேர்

285 0

201612150511361937_vaartha-cyclone-in-chennai-relief-efforts-in-the-affected_secvpfவார்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 ஆயிரம் பேர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.மின் வினியோகம் விரைவில் சீர்செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

‘வார்தா’ புயலை முன்னிட்டு சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வு கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் அமைச்சர்களின் கண்காணிப்பில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

மீட்பு நடவடிக்கைக்கு தேவையான உபகரணங்கள் இருப்பில் உள்ளன. மேலும் தேவைப்பட்டால் உபகரணங்களை பிற மாவட்டங்களில் இருந்து கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து நிலை அலுவலர்களும் திட்டமிட்டு துரிதமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

“வர்தா” புயல் காரணமாக சாலையோரம் மற்றும் அலுவலக வளாகங்களில் 10 ஆயிரத்து 682 மரங்கள் விழுந்தன. அவற்றில் 5 ஆயிரத்து 439 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள மரங்களை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சாலைகளில் உள்ள அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு சாலையின் ஓரத்தில் தள்ளப்பட்டு போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. சாலையில் விழுந்த மரங்களை அகற்ற சென்னை மாநகராட்சி மற்றும் பிற மாவட்டங்களிடமிருந்து 295 மர அறுவை எந்திரங்கள், 181 ஜே.சி.பி. எந்திரங்கள், 269 லாரிகள் வரவழைக்கப்பட்டன.

அவற்றைக் கொண்டு போர்க்கால அடிப்படையில் 18 ஆயிரம் சென்னை மாநகராட்சி பணியாளர்கள், ஆயிரத்து 983 பிற மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பணியாளர்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 983 பணியாளர்கள் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-மின்சார வாரியத்தின் மின்மாற்றி மற்றும் மின் இணைப்பு பெட்டியின் மீது விழுந்த மரங்கள் அகற்றப்பட்டதால், சென்னை நகர்ப்புற பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.புறநகர் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், 40-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. இதனை சீர்செய்ய சென்னை மாநகராட்சியைச் சார்ந்த 6 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 3 ஆயிரம் ஊழியர்கள் என மொத்தம் 9 ஆயிரம் ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் மின்வினியோகத்தை சீர்செய்ய பணியாற்றி வருகிறார்கள்.

மிகவிரைவில் மின் வினியோகம் சீர்செய்யப்படும். பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம், மின் துண்டிப்பால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நீரேற்றங்களில் மின்னாக்கிகளை பயன்படுத்திட அறிவுரை வழங்கப்பட்டு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்களின் மீன்பிடி கண்ணாடி இழைப் படகுகள், கட்டுமரம், மீன்பிடி பண்ணைகளின் சேதம் மற்றும் மீன்பிடி வலைகள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அனைத்து அலுவலர்களையும் ஒருங்கிணைத்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மீட்புப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு எவ்வித பாதிப்பும் இன்றி இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர், டாக்டர் எம்.மணிகண்டன், சென்னை மாநகராட்சி கமிஷனர் தா.கார்த்திகேயன், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய மேலாண்மை இயக்குனர் அருண்ராய் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.