மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் யானையை பாகன்கள் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து பாகன்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடந்து வருகிறது.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோவில் யானை ஜெயமால்யதாவும் அடங்கும்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பாகன்கள் தங்களது யானைகளை குளியல் மேடைகளுக்கு அழைத்து சென்று குளிக்க வைத்தனர். அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை ஜெயமால்யதாவை பாகன் வினில்குமார் என்ற ராஜா மற்றும் உதவி பாகன் சிவபிரசாத் ஆகியோர் குளிக்க வைத்து, அதனை கட்டிவைத்த இடத்திற்கு அழைத்து சென்றனர்.
அப்போது திடீரென ஜெயமால்யதா யானை, மற்றொரு யானையை கண்டதும் பாகன்களின் கட்டுப்பாட்டை மீறி ஓடியது. இதையடுத்து பாகன்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு யானையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மரத்தில் கட்டினர்.
யானையை கட்டுப்படுத்தியபோது பாகனின் காலை யானை மிதித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாகன், அவருடைய உதவியாளரும் ஜெயமால்யதா யானையை கம்பால் சரமாரியாக தாக்கினர். அப்போது யானை பிளிறிக்கொண்டே இருந்தது.
இதனை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். யானையை பாகன்கள் அடிக்கும் காட்சி வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், பாகன் ராஜா மற்றும் உதவிப்பாகனிடம் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் போலீசாரும் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து யானையை தாக்கிய பாகன் மற்றும் உதவி பாகனை பணியிடை நீக்கம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. இந்த நிலையில் வனத்துறையினர் பாகன்கள் 2 பேரையும் வனச்சட்டபடி கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற பாகன்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களை வனத்துறையினர் சமாதானம் செய்து, கைதான பாகன்களை மேட்டுப்பாளையம் வன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.