கமல்ஹாசன் கட்சியால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று ஓசூரில் கே.பி.முனுசாமி எம்.பி. கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட 6 கிராமங்களில் அம்மா மினி கிளினிக் மற்றும் கால்நடை பன்முக மருத்துவமனை திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நேற்று சந்தித்து பேசியுள்ளனர். இருவரும் நடிகர்கள், நீண்ட காலமாக நண்பர்கள் என்கின்றனர். அந்த நட்பு ரீதியாக அவர்கள் சந்தித்திருக்கலாம். ரஜினி தன்னால் அரசியல் கட்சி தொடங்க முடியாத சூழலில் உள்ளேன் என கூறிவிட்டார். ரஜினியை சந்தித்து பேசியதை கமல்ஹாசன் தான் தெரிவிக்க வேண்டும்.
மேலும், கமல்ஹாசன் கட்சி தொடங்கி எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை. மேலும் எந்த மாற்றமும் ஏற்படாது. 60 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து விட்டு மக்களை காப்பாற்றுவேன் என்றால் மக்கள் நம்ப மாட்டார்கள். நாங்கள் 60 ஆண்டு காலமாக மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். இதுபோன்ற கட்சிகள் திடீரென வரும். தேர்தலுக்கு பின்னர் காணாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார், ஓசூர் மாநகர செயலாளா் எஸ்.நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.