வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு தாய் நாடு பற்றி கூடுதல் கரிசனை காணப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜப்பான் வாழ் இலங்கையர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியினர் ஜப்பானுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாடுகளில் காணப்படும் மத வழிபாட்டுத் தளங்களின் ஊடாக வலுவான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை எனவும் இதன் போது தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஜப்பான் வாழ் ஆதரவாளர்களின் அழைப்பின் பேரில் சென்றுள்ள கோத்தபாயவுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில மற்றும் ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் நாளையும் பல தரப்புக்களை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளனர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இதற்கு முன்னரும் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் சீனாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டு, அங்குள்ள வணக்கஸ்தளங்களுக்கும் சென்று வந்தனர்.
அங்குள்ள மத வழிபாட்டுத்தளங்களுக்குச் சென்றுள்ளதோடு, இலங்கையர்களையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இவற்றை வைத்து நோக்குமிடத்து நாடு கடந்து சென்று ராஜபக்ஸர்கள் தமக்கான அரசியல் பலத்தை உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.