அரசியலில் காலடி எடுத்துவைக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்

250 0

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியலில் காலடி எடுத்துவைக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் முடிவு செய்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியலில் காலடி எடுத்துவைக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் முடிவு செய்துள்ளார். அதற்கான அறிவிப்பை சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் வெளியிடுகிறார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோது, கிரானைட் முறைகேட்டை வெளியே கொண்டுவந்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், நேர்மையான அதிகாரி என்று மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

இந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அறிவியல் நகர துணைத்தலைவர் பொறுப்பில் சகாயம் ஐ.ஏ.எஸ். பணியாற்றி வந்தார். மக்களுக்கு நேரடியாக சேவையாற்ற முடியாத பொறுப்பு இது என்பதால், அரசு மீது அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் 57 வயதான சகாயம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு கேட்டு அரசுக்கு விண்ணப்பித்தார். அதை கடந்த ஜனவரி 2-ந்தேதி தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, அவரை பணியில் இருந்து விடுவித்தது.

ஐ.ஏ.எஸ். அதிகாரியாக சகாயம் பணியாற்றியபோது, தான் பணிபுரியும் இடங்களில், ‘லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’ என்ற வாசகத்தை எழுதிவைத்திருந்தார். அவர் ஓய்வுபெற்ற நிலையில், அவரால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் அவரை அரசியல் கட்சி தொடங்கச்சொல்லி வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தனது அரசியல் பயண அறிவிப்பை சகாயம் வெளியிட இருக்கிறார். பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தனது அரசியல் பயணத்தை தொடங்குவது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்நோக்கப்படுகிறது.