முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணவாளன் பட்டமளிப்பு கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் ;சுமார் 20 ஏக்கர் வரையான காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பல மாதங்களாக கனரக இயந்திரங்கள் கொண்டு வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் எல்லைகளையும் தாண்டி காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்படுகின்றபோதும் ;பொலிசாரோ வனவளத்திணைக்களமோ பிரதேச செயலகமோ ; இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்கின்றமை தொடர்பில் ஐயம் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக காடழிப்பு இடம்பெறும் போதும் இன்றுவரை நடவடிக்கை எடுக்காமல் காடு அழிக்கப்படுகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக காடு அழிக்கப்பட்டு சுமார் 20 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் அழிக்கப்பட்டு இருக்கின்ற போதும் இதற்கான எந்த விதமான ஆவணங்களும் இல்லாத நிலையில் சட்டவிரோதமான முறையில் இந்த காடுகள் அழிக்கப்படுவதாக தெரியவருகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக குறித்த இடிக்கப்பட்ட காடுகளுக்கு உரிய ஆவணங்கள் தொடர்பிலான தகவல்கள் கோரப்பட்டபோதும் இன்று வரை பிரதேச செயலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான பதில்களை தராமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றமை பிரதேச செயலகத்தின் அதிகாரிகளும் இந்த காடழிப்பு நடவடிக்கைக்கு உடந்தையாக இருக்கிறார்களா என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தி இருக்கின்றது.
இவ்வாறே கிராமங்களில் ஏழை மக்கள் பலர் தமது வாழ்விடத்துக்காக அரை ஏக்கர் காணிகளை கூட பெற்றுக்கொள்ள முடியாது ; திண்டாடி வருகின்றனர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பண பலத்தையும் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி அரச அதிகாரிகள் பொலிசார் அனைவரம் நடவடிக்கை எடுக்காது பல ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகின்றன குறித்த விடயம் தொடர்பில் நாங்கள் காடுகளை அழித்து காணி பிடிக்க விடுவார்களா என ; மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
எனவே குறித்த மணவாளன் பட்டமளிப்பு பகுதியில் குறித்த பிரதேச சபை உறுப்பினரால் பிடிக்கப்பட்டிருக்கின்றன 20 ஏக்கருக்கு மேற்பட்ட அளவிலான இந்த காடுகள் எவ்வாறு இடிக்கப்பட்டது இதற்கான ஆவணங்கள் உள்ளதா இல்லை எனில் இதற்கு துணைபோன அதிகாரிகளுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் மிக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஏழை மக்களுக்கு வாழ்விடங்களுக்கு உரிய காணிகளை கூட பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் இவ்வாறு பண பலத்தை பயன்படுத்தி இடம்பெறுகின்ற நடவடிக்கைக்கு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்காமல் மௌனமாக இருக்கின்றமை தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி வெளியிடுகின்றனர்.