ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் குரலை கோட்டாபய ராஜபக்ஷவால் அடக்க முடியாது. பிரஜாவுரிமையை நீக்கினாலும் எம்மைச் சிறையிலடைத்தாலும் வாழ்வின் இறுதி வரை எமது போராட்டம் தொடரும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
ஜனநாயக ரீதியாகச் செயல்படுகின்றவர்களுக்கு எதிராகவும், அவர்களுக்கு சவால் விடுக்கும் வகையிலும் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவால் விசித்திரமான ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
எமது குடும்பம் சார்ந்த மோசடிகளில் யாரும் தலையிடாதீர்கள் என்று எச்சரிக்கும் வகையிலேயே இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான எமது குரலை முடக்குவதற்கு முயற்சித்தால் வாழ்நாளின் இறுதி வரை அதனை எதிர்த்துப் போராட நாம் தயாராகவுள்ளோம் என ஜனாதிபதியிடம் கூறிக்கொள்கின்றோம்.
எமது குரலை ஒடுக்கும் போராட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஷவால் வெற்றிபெற முடியாது. அவரை நாம் தோற்கடிப்போம்.
பிரஜா உரிமையை நீக்கினாலும் எமது போராட்டம் தொடரும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் பிரஜாவுரிமை எமக்குப் பெரிதல்ல.
1983 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, மக்கள் விடுதலை முன்னணியினரின் பிரஜாவுரிமையை நீக்கினார். ஆனால், எமது செயல்பாடுகளை அவராலும் முடக்க முடியவில்லை.
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 22 பேரின் பிரஜாவுரிமையை நீக்குமாறு கூறப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வேறு என்ன செய்வதென்று புரியாமல் இவ்வாறு செய்ய முற்படுகின்றார். அவருக்கு நாட்டை நிர்வகிக்கத் தெரியவில்லை.
தமது இயலாமையை அவர்கள் புரிந்துகொள்ளும் போது, உண்மையை வெளிப்படுத்தும் அரசியல்வாதிகளின் குரலை முடக்க முயற்சிக்கின்றனர்.
ஜனநாயகப் போராட்டத்தில் ராஜபக்ஷக்களின் 69 இலட்சம் வாக்குகளா அல்லது மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தியின் கூட்டு பலமா வெற்றி பெறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பிரஜாவுரிமையை நீக்கியல்ல, சிறையிலடைத்தாலும் ஜனநாயகத்துக்கான எமது குரலை அடக்க முடியாது எனத் தெரிவித்தார்.