அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தவைர் சஜித் பிரேமதாச இந்த விடயம் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு எதிர்க்கட்சி பலமுறை கோரிக்கைகளைகளை முன்வைத்தபோதிலும் அரசாங்கம் அதனை புறக்கணித்து, இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒரு திகதியை பரிந்துரைக்க மறுத்து வருகிறது.
அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் அதை விவாதிக்க ஒரு திகதியை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்தபோதிலும் தற்போது அதனை செய்யவில்லை.
இந்த அறிக்கையில் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டிய மிக முக்கியமான தகவல்கள் உள்ளன. ஆனால் அறிக்கையை அம்பலப்படுத்த அரசு ஏன் அஞ்சுகிறது.
அரசாங்கத்தின் குறைபாடுகள் மற்றும் ஊழல் மற்றும் மோசடி நடைமுறைகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை அரசாங்கம் தாக்கத் தொடங்கியுள்ளது. இது எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல்.
நாடாளுமன்றத்தில் அரசியல் பழிவாங்கள் தொடர்பான அறிக்கையை தாமதப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளும் இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளின் உரிமைகளை மீறும் செயலாகும்.
இது ஜனநாயகத்தை மீறும் செயல். எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் உரிமைகளை ஒழிக்கும் நோக்கில் இது செய்யப்படுகிறது.
எனவே நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் அரசியல் பழிவாங்கல் தொடர்பான அறிக்கையை அட்டவணைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்.
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே அறிக்கை குறித்து விவாதிக்க ஒரு திகதியை நிர்ணயிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.