பளையில் பல ஏக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்க நடவடிக்கை – சுரேஷ் குற்றச்சாட்டு

194 0

கிளிநொச்சி, பளை பகுதியில் பல ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றிற்கும், சிங்கள வர்த்தகர்களிற்கும் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பளை பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமாக 3,000 ஏக்கர் காணியுள்ளது. அந்த பகுதியில் சீன நிறுவனத்திற்கும், சிங்கள முதலாளிகளிற்கும் அரசு காணி வழங்கவுள்ளதாக நம்பத்தகுந்த செய்தி எமக்கு கிடைத்துள்ளது.

தமிழ் மக்களின் காணிகளை பறிமுதல் செய்து சீனாவிற்கு கொடுக்க, சிங்களவர்கறிற்கு கொடுக்க முன்னாயத்த நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

பளையில், புதுக்காட்டு சந்திக்கு அண்மையில் தேசிய காணி அபிவிருத்திசபைக்கு சொந்தமான 287 ஏக்கர் தென்னந்தோட்டங்கள் உள்ளன. அந்த காணிகளை யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தகர்கள் கேட்டும், அவர்களிற்கு வழங்காமல் அதை சிங்கள முதலாளிகளிற்கு கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் பிரச்சனையில்லை, அபிவிருத்தி நடந்தால் போதும் என அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது. அபிவிருத்தியென்ற பெயரில் தமிழர்களின் காணிகளை பிடுங்கி சிங்களவர்களிற்கு கொடுக்கும் நடவடிக்கையைத்தான் இந்த அரசாங்கம் மேற்கொள்கிறது.

அரசாங்கம், இராணுவம் அனைவரும் கூட்டாக இதனை செய்கிறார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை கண்டுகொள்ளாமலிருப்பது வருத்தமானது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்ற முயல்வதும் இதற்குத்தான். இந்த மாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். வடக்கிற்கான பிராந்திய அலுவலகம் வடமத்திய மாகாணத்திற்கு மாற்றுவதை ஏற்க முடியாது.

பளையில் சீனா அல்லது வேறு நிறுவனங்களிற்கு காணி கொடுப்பதை நிறுத்த வேண்டும். இந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் காணி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களிற்கு காணி வழங்காமல் சீனா, சிங்களவர்களிற்கு வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். இனிவரும் நாட்களில் பெரும் போராட்டங்களிற்கு தமிழ்மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய சூழலுக்கு அரசு தள்ளுகின்றது” என தெரிவித்துள்ளார்.