திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச திருமணம்

208 0

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கல்யாண மஸ்து திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இலவசமாக திருமணங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் கோவில்களுக்கு பசு மற்றும் கன்றுகளை வழங்கும் கோ மாதா திட்டத்தை அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் வெமிரெட்டி பிரசாந்தி 5 கோவில்களுக்கு பசு மற்றும் கன்றுகளை நன்கொடையாக வழங்கினார். அதற்கு சுப்பாரெட்டி பூஜை செய்தார்.

பின்னர் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெகன்மோகன் ரெட்டி வழிகாட்டுதலின்படி திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் மத நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதன் ஒரு பகுதியாக கார்த்திகை மாதத்தில் கோவில்களுக்கு பசு வழங்கும் கோமாதா திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது.

ஒரு பசுவை வணங்குவது முக்கோட்டி தேவதைகளை வணங்குவது போன்றது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இது நாட்டையும், மாநிலத்தையும் வளமாக்கும்.

தேவஸ்தானம் சார்பில் கல்யாண மஸ்து திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இலவசமாக திருமணங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு இலவச திருமணம் நடத்துவதற்காக 3 முகூர்த்த நாட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மே 28, அக்டோபர் 30, நவம்பர் 17 ஆகிய தேதிகளில் திருமணம் நடத்தப்பட உள்ளது.

இதற்காக திருப்பதியில் இயங்கி வரும் விசாரணை மையத்தில் தகவல்களை பெற்று ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யும் தம்பதிகளுக்கு தங்க தாலி, பட்டு வஸ்திரம், பூ மாலை, தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படும்.

மணமகன் வீட்டார் சார்பில் 10 பேரும், மணமகள் வீட்டார் சார்பில் 10 பேர் என திருமண விழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கு மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி., காலனிகளில் 500 கோவில்களை இந்து தர்ம பிரசாத பிர‌ஷத் மூலம் கட்ட ஜெகன்மோகன் ரெட்டி ஏற்றுக்கொண்டார். கொரோனா காரணமாக தாமதமாகி வந்த இப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.