யாழ் தீவுகளில் சீன மின் திட்டம் தொடர்வதை இந்தியா பார்த்துக் கொண்டிருக்காது. இவ்விடயத்தில் நிச்சயம் இந்தியா இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும். இலங்கை மீது இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு மேலும் அதிகரிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெஷா வித்தானகே தெரிவித்தார்.
திருகோணமலை துறைமுகத்தையும் இந்தியாவிற்கு அல்லது வேறொரு நாட்டுக்கு வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹெஷா வித்தானகே தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் தேசிய சொத்துக்களை விற்க மாட்டோம் என்று கூறியுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ , தற்போது கிழக்கு முனையத்திற்கு பதிலாக மேற்கு முனையத்தை வழங்க தீர்மானித்துள்ளார் யாழில் மூன்று தீவுகளில் சீன மின்திட்டம் தொடரப்படும் என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரத்திற்கு மிக அருகிலுள்ள தீவுகளில் சீனாவிற்கு வாய்ப்பளிப்பதை இந்தியா பார்த்துக் கொண்டிருக்காது. நிச்சயம் அழுத்தம் பிரயோகிக்கும். இதன் மூலம் இலங்கை மீது இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு மேலும் அதிகரிக்கும். திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியா வசமுள்ள நிலையில் , திருகோணமலை துறைமுகத்தையும் இந்தியாவிற்கு அல்லது வேறொரு நாட்டுக்கு வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை , பொருளாதார கொள்கை மற்றும் சுபீட்சத்தின் நோக்கு என எதனையுமே புரிந்து கொள்ள முடியாமலுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கை மீது சர்வதே அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை. பாரதிய ஜனதா கட்சி இலங்கையிலும் அதன் செயற்பாடுகளை ஆரம்பிக்கப் போவதாகக் கூறியுள்ள போதிலும் அது குறித்து கலவரமடையத் தேவையில்லை என்று அரசாங்கம் கூறுகிறது.
திரிபுரா முதல்வரால் கூறப்படும் கருத்திற்கு பதில் கூற முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. இரட்டை பிரஜாவுரிமை விவகாரத்தின் மூலம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளுக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றார்.