குஜராத்தில் பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணைகளில் உள்ள சுமார் 17 ஆயிரம் கோழி மற்றும் வாத்துகளை கொல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றன. எனினும் இந்த பறவை காய்ச்சல் இதுவரை மனிதர்கள் யாரையும் பாதித்ததாக தகவல் இல்லை.
இந்த நிலையில் பறவை காய்ச்சல் தீவிரமாக உள்ள மராட்டியத்தின் நந்துர்பர் மாவட்டத்தையொட்டிய குஜராத் பகுதியான தபி மாவட்டத்தில், பண்ணைகளில் பறவை காய்ச்சல் பரிசோதனை நடந்து வருகிறது. அந்தவகையில் உச்சகல் தாலுகாவில் 2 பண்ணைகளில் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவற்றில் பறவை காய்ச்சல் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த 2 பண்ணைகளிலும் உள்ள சுமார் 17 ஆயிரம் கோழி மற்றும் வாத்துகளை கொல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
குஜராத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.