2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நாங்கள் பகிரங்கப்படுத்தி, பேராயர் கர்தினாலிடமும் அதனை ஒப்படைப்போம். கர்தினால் நிச்சயம் திருப்திகொள்வார். கடந்த ஆட்சியைப் போன்று எதனையும் மூடிமறைப்பதற்கு எமக்கு அவசியமில்லை என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்தரமுல்லை வோட்டர் எட்ஜ் ஹொட்டலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கர்தினால், ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை கிடைக்கவில்லை என்றால் சர்வதேசத்தை நாடவிருப்பதாகத் தெரிவித்திருப்பதன் பின்னணியில் குழப்பநிலை நிலவுகிறதா? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்தவை வருமாறு:
‘அப்படியான எந்தக் குழப்பமும் இல்லை. நீதி கிடைக்காவிட்டால் என்றே பேராயர் கூறினார். இருப்பினும் அறிக்கையை நாங்கள் பகிரங்கப்படுத்தி கர்தினாலிடமும் அதனை ஒப்படைப்போம். கர்தினால் நிச்சயம் திருப்திகொள்வார்.
கடந்த ஆட்சியைப் போன்று எதனையும் மூடிமறைப்பதற்கு எமக்கு அவசியமில்லை. ஜனாதிபதி ஆணைக்குழுவில் கர்தினால் இரண்டு தடவைகள் சாட்சியம் வழங்கியுள்ளார்.
நல்லாட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மீது கர்தினாலுக்கு நம்பிக்கை இருக்கவில்லை.
இருப்பினும் நாங்கள் எதனையும் மறைக்க மாட்டோம். அறிக்கையிலுள்ள உள்ளடக்கங்களை கர்தினாலுக்கும் நாட்டு மக்களுக்கும் நிச்சயம் பகிரங்கப்படுத்துவோம்.
கடந்த காலங்களில் அரசாங்கங்கள் அமைத்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படவே இல்லை. ஆனாலும், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் அதுதொடர்பில் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக அரசியல் பழிவாங்கல் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை 2000 பக்கங்களைக் கொண்டுள்ளது.
அவை நிச்சயம் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.