யாழில் ஆசிரியர்களால் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவர்கள் -சென்றது முறைப்பாடு

248 0

வலிகாமம் கல்வி வலயத்துக்கு உள்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் சிலரால் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் தரம் 11இல் பயிலும் மாணவன் ஒருவன் உடலில் பச்சை குத்தியுள்ளதாக ஆசிரியர்கள் சிலரால் அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தரம் 11இல் பயிலும் 70 ஆண் மாணவர்களை பாடசாலை வளாகத்திலுள்ள மறைவான இடம் ஒன்றுக்கு அழைத்த ஆசிரியர்கள், வலுக்கட்டாயமாக ஆடைகளை களையுமாறு அவர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

ஆசிரியர்களின் அறிவுறுத்தலை மீற முடியாமல் தாம் சித்திரவதைக்கு உள்ளாகியதாக மாணவர்கள் தமது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

தாம் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து மாணவர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“மாணவர்களின் முறைப்பாடு கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை கிடைத்தது. சம்பவம் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சிடம் விளக்கமளிக்குமாறு எழுத்துமூலம் கோரப்பட்டுள்ளது” என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் தெரிவித்தார்