மண்ணச்சநல்லூரில் ரூ.25 கோடியில் புறவழிச்சாலை – பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

258 0

மண்ணச்சநல்லூரில் ரூ.25 கோடியில் அமைக்கப்பட்ட புறவழிச்சாலை நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

மண்ணச்சநல்லூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பயண நேரத்தை குறைத்து மக்களுக்கு வசதியை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும் ரூ.25 கோடியில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கி இருந்தது. அதனைத்தொடர்ந்து அத்தாணியிலிருந்து மண்ணச்சநல்லூர் தாலுகாஅலுவலகம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் புறவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த வருடம் மேமாதம் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த திட்டத்தின் கீழ் பெருவளைவாய்க்கால் குறுக்கே ஒருபாலமும், புள்ளம்பாடி வாய்க்கால் குறுக்கே ஒருபாலமும், பாசன வாய்க்கால்களில் மக்களுக்கு பயன்படும் வகையில் சுமார் 16 சிறிய பாலங்களும் கட்டும் பணிகள் நடைபெற்று முடிந்தன.

இதைத்தொடர்ந்து நேற்று இந்த சாலையின் திறப்பு விழா நடைபெற்றது. சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் புறவழிச்சாலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து தொடர்ந்து திருச்சியில் இருந்து மண்ணச்சநல்லூர், புலிவலம் வழியாக துறையூர் செல்லும் வாகனங்களும், துறையூரில் இருந்து அதேவழியாக திருச்சி செல்லும் கார், வேன், லாரி மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த வழியாக சென்றன. இந்த புறவழிச்சாலை திறக்கப்பட்டதையொட்டி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.