அபுதாபி நகரின் மிக பழமையான டால்பின் பூங்காவானது 10 லட்சம் திர்ஹாம் செலவில் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அபுதாபி மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அபுதாபி நகரில் உள்ள மிக பழமையான பூங்காக்களில் ஒன்று டால்பின் பூங்கா ஆகும். இந்த பூங்காவானது ஷேக் ஜாயித் பின் சுல்தான் சாலையில் அல் குர்ரம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.
அதிகமான பசுமை புல்வெளிகளை கொண்டுள்ள இந்த பூங்காவானது குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. மேலும் செயற்கை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளும் இங்கு அமைந்துள்ளது. இதன் காரணமாக அபுதாபி பகுதியில் வசித்துள்ளவர்களுக்கு மிகவும் முக்கியமான பொழுதுபோக்கு இடமாக இது திகழ்ந்து வருகிறது.
இந்த பூங்காவில் ஏற்படுத்தப்பட்ட வசதிகள் மிகவும் பழமையாக இருப்பதால் இங்குள்ள வசதிகளை மறுசீரமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 10 லட்சம் திர்ஹாம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி இந்த பூங்காவில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் வண்ணமயமாக புத்தம் புதிய பூங்காவாக இருக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் சிறப்பாக தெரியும் வகையில் வண்ண விளக்குகளும், வழிகாட்டி பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு டால்பின் வடிவில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றானது 30 ஆண்டுகள் பழமையானது. இதுவும் தற்போது புனரைமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தண்ணீர் மிக உயரத்தில் இருந்து விழும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் இறைச்சியை கொண்டு வந்து இங்கு சுட்டு சாப்பிடும் வசதியுள்ளது. இதற்காக 10 இடங்கள் உள்ளன. மேலும் கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதற்கான மைதானமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இங்கு வருவதற்கு வசதியாக, பூங்காவின் அருகேயுள்ள ஷேக் ஜாயித் பின் சுல்தான் சாலையும் கடந்த 2019 ஆம் ஆண்டு அகலப்படுத்தப்பட்டது.
தற்போது இந்த பூங்காவின் அருகில் உள்ள 4 கிலோ மீட்டர் தூர நடைப்பயிற்சி மேற்கொள்ள உதவும் பாதையானது மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் நிறைவடையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டால்பின் பூங்காவின் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.