கிழக்கு லடாக் பகுதியில் இருந்து படைகளை திரும்பப்பெறுவது, சீனாவிடம் சரண் அடைவதற்கு சமம் என்று முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி கூறினார்.
கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் சீனப்படைகள் தொடர்ந்து அத்துமீறியதால் இந்திய படைகளும் சரியான பதிலடி கொடுக்க நேர்ந்தது. தொடர்ந்து இரு தரப்புகளும் அங்கு படைகளையும், தளவாடங்களையும் குவித்து, போர்ப்பதற்றம் நிலவி வந்தது.
இதற்கு மத்தியில் அங்கு பதற்றத்தை தணிப்பதற்காக இரு தரப்பும் ராணுவ ரீதியிலும், ராஜதந்திர ரீதியிலும் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தின.
இதன் விளைவாக கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங் சோ ஏரி பகுதியிலும் படைகளை இரு தரப்பும் திரும்பப்பெறுவது என சமீபத்தில் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்தார். அப்போது அவர் கிழக்கு லடாக்கில் பாங்காங் சோ ஏரி பகுதியில் படைகளை திரும்பப்பெறுவதற்காக இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் விட்டுக்கொடுத்துவிடவில்லை, ஒரு அங்குலத்தை கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என குறிப்பிட்டார்.
ஆனால் இதை ராகுல் காந்தி சாடினார்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான ஏ.கே. அந்தோணி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சீனா போர்க்குணத்தை கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வரும் சூழலில், நரேந்திர மோடி அரசு தேசிய பாதுகாப்புக்கு சரியான முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது வருத்தம் தருகிறது.
படைகளை திரும்பப்பெறுவது பதற்றத்தை தணிக்கும் என்பதால் நல்லதுதான். ஆனால் அதற்கு தேச பாதுகாப்பை விலையாக கொடுத்து விடக்கூடாது.
கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் சோ ஏரி பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப்பெறுவது என்பது சீனாவிடம் சரண் அடைவதுதான்.
இது பாரம்பரியமாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை சரண் அடைவதற்கு சமம்.
நாம் நமது உரிமைகளை ஒப்படைக்கிறோம்.
கல்வான் பள்ளத்தாக்கு என்பது இந்திய பகுதிதான். இதில் 1962-ல் கூட சச்சரவு வந்தது கிடையாது.
இப்போது படைகளை திரும்பப்பெறுவதின் முக்கியத்துவத்தையும், இரு தரப்புக்கும் இடையேயான பகுதியை உருவாக்குவதையும் அரசு புரிந்துகொள்ளவில்லை. சியாச்சினில் பாகிஸ்தானுக்கு எந்த நேரத்திலும் உதவி செய்து, சீனா விஷமத்தனம் செய்யும்.
நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புவது, இந்திய, சீன எல்லையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திக்கு முன்பு இருந்த நிலை வருவது எப்போது ? இந்த வகையில் அரசின் திட்டம்தான் என்ன?
எல்லைகளில் பழைய நிலைகளை திரும்ப கொண்டு வருவதில் அரசு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
சீனாவை தாஜா செய்யும் வகையில், ராணுவ பட்ஜெட்டை மத்திய அரசு உயர்த்தவில்லை. அவர்களுடன் மோத விரும்பவில்லை என்ற செய்தியையே இது விடுக்கிறது.
சீனாவிடம் இருந்தும், பாகிஸ்தானிடம் இருந்தும் ஒட்டுமொத்த தேசமும் கடுமையான சவால்களை சந்திக்கும்போது, ஆயுதப்படைகள் கூடுதல் ஆதரவையும், கணிசமான பட்ஜெட் உயர்வையும் கேட்கின்றன.
ஆனால் கடந்த ஆண்டின் மாற்றியமைக்கப்பட்ட ராணுவ பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், இந்த பட்ஜெட்டில் ராணுவத்துக்கு வெறும் 1.48 சதவீதம் மட்டுமே உயர்த்தி இருப்பது மிகவும் குறைவு. இது போதாது.
இது நாட்டை காட்டிக்கொடுப்பதாகும். இந்த அரசு நமது பாதுகாப்பு படைகளை கீழே விழ வைத்திருக்கிறது. தேசிய பாதுகாப்புக்கு சரியான கவனத்தை அரசு வழங்கவில்லை.