முல்லைத்தீவில் இருந்து கடல்மார்க்கமாக கடத்தி திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்ட 140 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை 2 மணியளவில் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஞ்சாவைக் கடத்திய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பிராந்திய துர்நடத்தை ஒழிப்பு பிரிவின் பொலிஸ் குழு ஒன்று குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைத்து தேடுதல் நடாத்திய போது கஞ்சா கைப்பற்றப்பட்டது. முல்லைத்தீவில் இருந்து கடல் மார்க்கமாக ஒரு தொகை கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து குறித்த பிரதேசத்தில் பொலிஸ் குழுவொன்று மறைந்திருந்தது.அவ்வாறு மறைந்திருந்த வேளையில் அந்த வழியாக பயணித்த வானொன்றை வழிமறித்து சோதனை நடத்தியது.
குறித்த வானில் மூவர் இருந்ததுடன், வானில் இருந்து 140 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர்கள் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கஞ்சா முல்லைத்தீவில் இருந்து படகொன்றில் கொண்டுவரப்பட்டு நிலாவெளி கடற்கரையில் இறக்கப்பட்டு அங்கிருந்து வான் ஒன்றில் ஏற்றிவரப்பட்டதாக சுற்றிவளைப்பு குழுவுக்கு தலைமை தாங்கிய உதவி பொலிஸ் பரிசோதகர் ரத்னநாயக்க குறிப்பிட்டுள்ளார்.