வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

238 0

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர், கிளிநொச்சியிலுள்ள மற்றொரு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில், நேற்று (சனிக்கிழமை)  340 பேரின் மாதிரிகள், பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கரைச்சியிலுள்ள மற்றொரு ஆடைத்தொழிற்சாலையில் கடந்த வாரம் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையவருக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் நெஞ்சுவலி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என  அவர் குறிப்பிட்டுள்ளார்.