பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கைக்கான விஜயம் இந்திய அரசாங்கத்திற்கு எதிரானதாக அமைந்து விடக்கூடாதென நுவரெலியா மாவட்ட உறுப்பினரான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “தற்பொழுது இலங்கையில் இந்தியாவிற்கு எதிரான ஒரு நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் கொழும்பு துறைமுகம் தொடர்பான ஏற்பட்டுள்ள முறுகல் நிலையாகும்.
ஆரம்பத்தில் இந்திய அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு தயாராக இருந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்ட பல்வேறு தரப்பினரின் இந்திய எதிர்ப்பு போராட்டம் காரணமாக இந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தற்பொழுது இந்தியா தொடர்பாக இலங்கையில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் குறித்து பல கேள்விகள் எழுகின்றன.
மேலும் பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயமானது இந்தியாவிற்கு எதிரானதாக அமைந்து விடக்கூடாது. ஏனெனில் இந்தியா என்பது எமது குடும்பத்தில் ஒருவர் போல. பல்வேறு இக்கட்டான சந்தரப்பங்களிலும் இந்தியாவின் உதவி எமக்கு கிடைத்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.