ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் யார்? முடிவு இன்று

393 0

download-2ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய கூட்டம் ஒன்று  இன்று மாலை கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ளது.

கட்சிக்குள் செயலாளர் நாயகம் மற்றும் செயலாளர் என இரு பதவிகள் காணப்படுகின்ற நிலையில் ஒரு கட்சிக்குள் இருவர் செயலாளர் பதவிகளை வகிக்க முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கட்சியின் செயலாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாளைய தினத்திற்குள் அறிவிக்குமாறும் அவர் கட்சியின் தலைமைப்பீடத்திற்கு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நாளை தினத்திற்குள் பதவி குறித்த அறிவிப்பை விடுக்காவிடின் தேர்தல்களின்போது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதில் சிக்கல்கள் தோன்றுமெனவும் அவர் எச்சரித்திருந்தார்.

இந்த சூழ்நிலையிலேயே செயலாளர் பதவி குறித்து இறுதித்தீர்மானம் எடுக்கும் வகையில் கட்சியின் உயர்பீடம் இன்று கூடவுள்ளது. இந்த சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசிர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலி ஆகியோர் பங்கேற்பது சந்தேகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 32 வருடங்களாக கட்சிக்காக உழைத்த தம்மை முஸ்லிம் காங்கிரஸ் ஓரங்கட்ட முயற்சிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.