அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்காக இதுவரை ரூ.1,511 கோடி நன்கொடை வசூல்

239 0

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக இதுவரை ரூ.1,511 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளது என அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

இந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோவில் கட்டுவதற்காக பொதுமக்களிடம் நன்கொடைகள் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மக்களிடம் பெறப்பட்டுள்ள நன்கொடை குறித்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி, குஜராத் மாநிலம் சூரத் நகரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், மக்கள் ராமர் கோவில் கட்டுவதற்கு தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கி வருகிறார்கள். 492 ஆண்டுகளுக்குப்பின் மக்கள் மீண்டும் மிகப்பெரிய தர்மத்தைச் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை ராமர் கோவில் கட்டுவதற்கு ரூ.1,511 கோடி நன்கொடையாக அறக்கட்டளை திரட்டியுள்ளது என தெரிவித்தார்.