கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் எந்த நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்த கூடாது – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

233 0

கொரோனா வைரஸ் பரவல் குறைந்தாலும், எந்த ஒரு நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது, அதற்கான தருணம் வரவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகுக்கு பெரும் சவாலாக அமைந்த கொரோனா வைரஸ், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலாக வெளிப்பட்டது.

அந்த வைரசின் சீற்றம், அது தோன்றி ஓராண்டு கடந்து விட்ட நிலையில் இப்போது தணியத்தொடங்கி உள்ளது. கொரோனா பரவல் பல நாடுகளிலும் குறைந்து வருகிறது. இது உலக நாடுகளையெல்லாம் நிம்மதிப்பெருமூச்சு விட வைத்துள்ளது.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:-

தொடர்ந்து 4-வது வாரமாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல், உலக அளவில் குறைந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்து 2-வது வாரமாக கொரோனா உயிர்ப்பலி எண்ணிக்கை சரிந்துள்ளது.

பல நாடுகளிலும் பொதுசுகாதார நடவடிக்கைகளை மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தி உள்ளதின் விளைவுதான் இது என்று தோன்றுகிறது. இதற்காக நாம் ஊக்கம் அடையலாம். ஆனால் இதில் மன நிறைவு கொள்வது என்பது அந்த வைரசைப்போலவே ஆபத்தானது.

தற்போது கட்டுப்பாடுகளை எந்த நாடுகளும் தளர்த்தும் தருணம் எந்த நாட்டுக்கும் வரவில்லை. எனவே கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது. அதே போன்று எந்த தனிநபரும் கொரோனா கால பாதுகாப்பு அம்சங்களை குறைப்பதற்கான தருணமும் இது அல்ல.

தடுப்பூசிகள் தயாரிப்பு தொடங்கி உள்ள நிலையில் நேர்ந்துள்ள ஒவ்வொரு உயிரிழப்பும் மிகுந்த சோகத்துக்குரியதுதான்.

கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றி ஆராய உகான் நகருக்கு சமீபத்தில் உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு சென்றது. அவர்கள் கண்டறிந்துள்ளவை குறித்து அடுத்த வாரம் அறிக்கை வெளியிடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

உகான் சென்ற உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு தலைவர் பீட்டர் பென் எம்பரேக் நேற்று முன்தினம், “எங்களது குழு சென்ற உகான் பரிசோதனைக்கூடங்கள், கொரோனா வைரசை ஏற்படுத்துகிற வைரசுடன் வேலை செய்யவில்லை. கொரோனா வெடிப்பதற்கு முன்பாக அவர்களது சேகரிப்பிலும் இல்லை. ஆனால் இன்னும் பகுப்பாய்வு செய்யப்படாத மாதிரிகளில் கூட கொரோனா வைரஸ் இருக்கக்கூடும்” என கூறியது குறிப்பிடத்தக்கது.