ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் சாராம்சத்தை பொதுபலசேனா அமைப்புக்கு உடன் வழங்க வேண்டும்.
அல்லது பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுபல சேனா அமைப்பின் ஊடகச் செயலாளர் ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
அந்தக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கடந்த 2019.04.21 ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுபல சேனா அமைப்பு மற்றும் ஞானசார தேரருக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என பிரதான ஊடகம் ஒன்று தலைப்புச்செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை அந்த ஆணைக்குழுவின் தலைவரால் ஜனாதிபதிக்கு மாத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கோஇ ஏனைய தரப்பினருக்கோ இதுவரையில் வழங்கப்படவில்லை.
எமது அமைப்பு தொடர்பில் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படும் விடயங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளமை பொதுபல சேனா அமைப்புக்கு இழைக்கும் அநீதியாகவே கருத முடியும்.
பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் பிரதான ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தியை ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகவே அந்த ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச்செய்தி மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்தை தோற்றுவித்துள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பில் எமது அமைப்பின் சார்பில் சாட்சியங்களை பெறுவது அவசியமாகும் – என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினர் கடந்த மதம் 31 ஆம் திகதி விசாரணை அறிக்கையை கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தனர்.