எல்லையில் படைகளை திரும்பப்பெற இந்தியா, சீனா ஒப்பந்தம் – அமெரிக்கா வரவேற்பு

240 0

பதற்றத்தைத் தணிக்கிற வகையில் எல்லையில் படைகளை திரும்பப்பெற இந்தியா, சீனா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த மே மாதம் முதல் சீன துருப்புகள் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தன. இந்திய படைகள் சரியான பதிலடி கொடுத்தன. இதன் விளைவாக இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் குவித்து போர்ப்பதற்றம் நிலவி வந்தது.

தற்போது இருதரப்பு பேச்சுவார்த்தையின் விளைவாக, பதற்றத்தைத் தணிக்கிற வகையில் எல்லையில் படைகளை திரும்பப்பெற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

இதுதொடர்பாக, அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், எல்லையில் படைகள் வாபஸ் பெறுவது தொடங்கி இருப்பதாக தகவல்கள் வருவதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பதற்றத்தைத் தணிக்க நடந்து வரும் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இரு தரப்பும் அமைதியான முடிவுக்காக செயல்படுவதால் நாங்கள் நிலைமையை தொடர்ந்து கண்காணிப்போம் என குறிப்பிட்டார்.