தமிழகம் முழுவதும் தலைமறைவு குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் அதிகாரிகளுடன் தமிழகம் வந்தார்.
2 நாட்கள் சென்னையில் அவர் ஆலோசனை நடத்தினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலையாமல் இருக்கும் வகையில் திட்டமிட்டு அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் தலைமறைவு குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கி உள்ளனர்.
சென்னையில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசாரும் சென்னையில் உள்ள சட்டம்- ஒழுங்கு காவல் துறையினரும் தங்கள் பகுதியில் உள்ள தலைமறைவு ரவுடிகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பழைய குற்றவாளிகளின் பதிவேடுகளை வைத்துக்கொண்டு அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றிய விசாரணையில் இறங்கி உள்ளனர்.
தலைமறைவு ரவுடிகளின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு அவர்களை கண்டுபிடிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே இந்த ரவுடிகள் வேட்டை தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் போலீசில் சிக்கி உள்ளனர். இவர்களில் பலரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
நன்னடத்தை சட்டபிரிவின் கீழும் ரவுடிகள் பலரிடம் எழுதி வாங்கி அனுப்பி வைத்துள்ளனர். இது போன்று எழுதி கொடுக்கும் ரவுடிகள் ஓராண்டுக்கு குற்ற செயலில் ஈடுபட மாட்டேன் என்று உறுதிமொழி அளித்துள்ளனர்.
இப்படி நன்னடத்தை பிரிவின் கீழ் உறுதி அளிக்கும் ரவுடிகளின் நடவடிக்கை எப்படி உள்ளது? என்பது பற்றியும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.
தவறு செய்ய மாட்டேன் என்று எழுதி கொடுத்து விட்டு குற்றசெயல்களில் ஈடுபடும் ரவுடிகளை உடனடியாக பிடித்து சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையை போன்று வெளிமாவட்டங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தலைமறைவாக உள்ள ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் ஆகியோரை தேடி கண்டுபிடிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை அடுத்து வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 1200 ரவுடிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள அனைத்து ரவுடிகளையும் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.