வடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா

215 0

வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் நால்வர் அச்சுவேலிச் சந்தையைச் சேர்ந்தவர்கள். இருவர் யாழ்ப்பாணத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட தனியார் பேருந்து நடத்துனரின் மனைவி, பிள்ளை என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் ஆகியவற்றில்  நேற்று (வெள்ளிக்கிழமை)  689 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொதுச் சந்தையில் எழுமாற்றாகப் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சந்தைகளை மீளத் திறக்க அனுமதிக்கப்பட்ட பின்னர் அவற்றில் வாராந்தம் எழுமாறாக மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை – கச்சேரி தனியார் பேருந்து சேவையின் நடத்துனர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்ட நிலையில், அவரது மனைவிக்கும் பிள்ளைக்கும் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் முசலி வாடியில் தொற்று ஏற்பட்டவருடன் நேரடித் தொடர்பில் இருந்தவருக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் ஏனைய இருவரும் மன்னார் நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்கள்.

இதேவேளை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் அண்மையில் தொற்றாளாராக அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்புடையவர் என்றும் வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.