பிரான்சு தேசத்தில் பொபினி மாநகரசபையில் இலங்கை பேரினவாத பௌத்த அரசிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை 12.02.2021.

478 0

பிரான்சின் பாரிசின் புறநகர் பகுதியும், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பொபினி(BoBigny) நகரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ மக்களின் ஓர் கட்டமைப்பாக பிராங்கோ தமிழ்ச்சங்கமானது செயற்பட்டு வருவதோடு, எமது மக்களின் வாழ்வியல், மொழி, கலைபண்பாடு, விளையாட்டு, ஆன்மீகம் அரசியல் மற்றும் சமூகநலப்பணிகள், பல்லின மக்களுடனான உறவு என்று பல்வேறு செயற்திட்டங்களிலும் செயற்பட்டு வருகின்றது. கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சித்தேர்தலில் இன்றைய முதல்வராக இருக்கும் மதிப்புக்குரிய அப்துல் சாடி ( Abdel Sadi ) அவர்களின் கட்சியில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. பொன்னுத்துரை நந்தகுமார் அவர்களும் இணைந்து மாநகரசபை ஆலோசகராக தேர்தலில் போட்டியிட்டு அமோக வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பெற்றிருந்தனர்.

இன்றைய தற்போதைய பேரிடர்காலத்திலும் முதல்வர் உட்பட மற்றும் மாநகரசபை நிர்வாகம் பொபினி பிராங்கோ தமிழ்ச்சங்கத்துடன் தமது உறவை பலப்படுத்தியே வருகின்றனர். உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் கோவிட் 19 பேரிடரில் இங்கு வாழும் தமிழீழ மக்களின் நிலைமைகளையும், தாயகத்தில் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் ஒடுக்கு முறைகள் பற்றியும், அதனை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் முன்னெடுப்புகள் பற்றியும் கடந்த 11.02.2021 ( வியாழக்கிழமை) அன்று நடைபெற்ற சந்திப்பில் விரிவாகக் கதைக்கப்பட்டது.

தமிழர்கள் தரப்பில் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. பொ. நந்தகுமார் மற்றும் சங்க பரப்புரையாளர், மக்கள் தொடர்பாளர், உறுப்பினர்களுடன், பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு துணைப்பொறுப்பாளர் திரு. மணி, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிச்சங்கக்கூட்டமைப்பின் அரசியல் பிரிவு சார்பாக திரு. பாலகுமார் போன்றோரும், மாநகரமுதல்வர் மதிப்புக்குரிய அப்துல் சாடி, மற்றும் துணைமுதல்வர் மதிப்புக்குரிய ரஞ்சித் சிங் ( Ranjit Singh) துணைச் செயலாளர் ஏனைய முக்கிய உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இன்றைய காலத்திற்கு தேவையான பல்வேறு விடயங்கள் கதைக்கப்பட்டன. பொபினி மாநகரத்தில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவத்தை வகிக்கும் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினரின் கேரிக்கையாக தமிழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு நீதிகோரியும் தமிழீழ மக்களின் நியாயமான போராட்டத்திற்கு தார்மீக ஆதரவைத் தரவேண்டும் என்றும், சர்வதேசமும், பிரெஞ்சு தேசமும் இதில் கவனம் எடுக்க வேண்டும் என்றும், அதற்காக ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதோடு, சிங்கள பேரினவாத அரசின் இனபாகுபாட்டில் சிக்குண்டு வாழும் தமிழீழத்தில் ஓர் கிராமத்தை பொறுப்பெடுத்து உதவ வேண்டும் என்றும் ( பாலஸ்தீனத்தில் (Ville du BOBIGNY என்று செய்வது போன்று) கேட்கப்பட்டது.

இத்துடன் பொபினி தமிழ் மக்கள் அதிகம் வாழும் மாநகரம் என்பதால் பல்வேறு தேவைகளை தாய்மொழிக்கல்விக்கான இடம், ஆன்மீக வழிபாட்டிடம் ,விளையாட்டுமைதானம் போன்றதோடு, இந்த மாநகரத்தில் வாழும் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் ஈழவிடுதலைதலைப் போராட்டத்தில் பெரும் பங்காளர்களாக இருந்து வந்துள்ளனர். ஏனைய மாநகரங்களில் அமைக்கப்பட்டது போன்று இம் மாநகர மக்களின் பங்களிப்போடு தமிழீழ நினைவுச்சின்னம் ஒன்று இம்மாநகரத்திலும் அமைக்கப்பட வேண்டும் என விரும்புவதாகவும் கேட்கப்பட்டது. இத்துடன் இங்கு வாழும் தமிழ் மக்களின் அனைத்து தேவைகளையும் முடிந்த அளவு நிறைவேற்றிதர வேண்டும் என்று கேட்டதற்கமை அவற்றை நிச்சயம் தாம் செய்து தருவோம் என்ற உறுதிமொழியினை முதல்வரும், துணைமுதல்வரும் உறுதிவழங்கியிருந்ததுடன்.

மாவட்டரீதியாக (93) நடைபெறுகின்ற பல்லின கலைகலாசார நிகழ்வுகளின் தமிழீழ மக்கள் அனைத்து வழிகளிலும் கலந்து கொள்வதோடு எமது தேவைகளை அவசியத்தை பல்லின் மக்ளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இச் சந்திப்பின் முடிவில் பிராங்கோ தமிழ்ச்சங்கம் சார்பாக தமிழீழத்தேசியகொடி ( மேசையில் வைப்பது) முதல்வரிடம் கையளிக்கப்பட்டது. மிகுந்த பூரிப்புடனும் சந்தோசத்துடன் அதனை அவர் பெற்றிருந்தார். ஏனையவர்கள் கரவொலி எழுப்பி தமது உணர்வை வெளிப்படுத்தியிருந்தனர். 1மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பு மிகுந்த காத்திரமானதாக அனைவருக்குமே அமைந்திருந்தது.

தொடர்ந்து இச்சந்திப்பு தொடர்பாகவும் கலந்து கொண்டு ஏற்பாடு செய்த பிராங்கோ தமிழ்ச்சங்கத்துக்கும் ஏனையவர்களுக்கு முதல்வர் மற்றும் துணைமுதல்வர் தங்களின் நன்றி வீடியோ மூலமாக தமது முகநூலில் வெளியிட்டிருந்ததையும் குறிப்பிடத்தக்கது. அவற்றைஇங்கே காணலாம்.

நன்றி. ஊடகப்பிரிவு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு