கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் முகமாலை திரேசம்மாள்புரம் பகுதியில் முப்பது ஏக்கருக்கும் மேலான காணி மோசடி செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
இந்த காணியை 2000.05.29 ஆம் திகதி கொழும்பில் இறந்த அருட்தந்தை மைக்கல் சவரிமுத்து என்பவரின் கை ஒப்பத்தைப் பயன்படுத்தி 2019.07.05 இல் அபகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முகமாலை திரேசம்மாள்புரம் பகுதியில் அருட்தந்தையின் பராமரிப்பில் சுமார் ஐம்பது ஏக்கர் காணி காணப்படுகிறது. யுத்த காலத்தில் முகமாலை பிரதேசம் கடுமையான யுத்தம் இடம்பெற்ற பிரதேசமாகவும், விடுதலைப்புலிகளதும், ஸ்ரீலங்கா இராணுவத்தினரதும் முன்னரங்க பிரதேசமாகவும் காணப்பட்டது.
இதனால் குறித்த பகுதி அபாயகரமான வெடிப்பொருட்கள் நிறைந்த பற்றைக் காடுகளாக மாறியிருந்தது. இந்நிலையில் குறித்த காணியினை பராமரித்து வந்த அருட்தந்தையும் 2000.05.29அன்று கொழும்பில் மரணமடைந்துவிட்டார்.
2009 யுத்தம் நிறைவுக்கு வந்து கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு குறித்த பிரதேசத்தில் மக்கள் குடியமர்த்தபட்டு வந்த நிலையில் அருட்தந்தையின் பராமரிப்பில் இருந்த காணி அவ்வாறே காணப்பட்டது. இந்த நிலையில் தான் பளை பிரதேச இளம் அரசியல் பிரமுகர் ஒருவர் முன்னின்று குறித்த காணியை முறைகேடாக பொது மக்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார்.
இதற்காக 2019.07.05 ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள நொத்தாரிசு ஒருவரின் பளை அலுவலகத்தில் அருட்தந்தை மைக்கல் சவரிமுத்துவின் போலி கை ஒப்பம் இட்டு காணி மோசடி செய்யப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் பளை பிரதேச செயலரிடம் வினவிய போது குறித்த காணி தனியார் காணி என்பதனால் தங்களிடம் பிரச்சினைகள் வருவதில்லை எனவும் இருப்பினும் அக்காணி தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளமையால் அரசின் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நடை முறைப்படுத்தாது நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.