வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து எமது முன்னோர்கள் வழி வழியே மரபு வழித் தாயகமாக விளங்கிவரும் தமிழீழத்தின் வரலாறானது இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது.
இணைந்த வடகிழக்கு மாநிலங்களை அடிப்படையாக கொண்ட தமிழர்களின் இறையாண்மையின் வழித்தடத்தில் கட்டியெழுப்பப்பட்டதே தமிழர்களது தேசிய அபிலாசையாகும். அதனை தகர்ப்பதற்கு சிங்களம் எடுக்கும் முயற்சிகளுக்கு துணைபோவது தேசத்துரோகமாகும்.
ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் சிங்கள பௌத்த மேலாதிக்க மனநிலையின் வெளிப்பாடாக நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தடைக்கல்லாகும். தற்போது அதில் திருத்தங்கள் செய்வதாக உலகத்தை ஏமாற்றும் சிங்கள அரசு எப்பாடு பட்டேனும் அந்த நாடகத்தை வெற்றிகரமாக மேடையேற்றிவிடத் துடிக்கின்றது. அதற்கு சிங்களத்தின் சதி வலையில் சிக்கிய சில புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் சம்பந்தன்-சுமந்திரன் போன்ற மக்கள் பெருவிருப்பை பிரதிபலிக்காகதவர்களுக்கு பக்கவாத்தியம் வாசித்துவருகின்றனர்.
அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த வெளிப்பாடு, குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர்களால் இராணுவத்திடம் ஒப்படைப்பு செய்யப்பட்டவர்களது நிலை, புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்து வரும் முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்கள் உள்ளிட்ட அதி முக்கிய விடயங்களில் ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணங்களுக்கு விரோதமாக செயல்பட்டுவரும் சம்பந்தன்-சுமந்திரன் ஆகியோர் அரசியல் யாப்பு திருத்தத்திற்குள் தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வு இருப்பதாக நம்பவைக்க முயற்சித்து வரும் அதே நேரத்தில் மரபுவழித் தாயகமான வடக்கு-கிழக்கு பிரிவு நிலையை நியாயப்படுத்தவும் கங்கணம்கட்டி நிற்கின்றனர்.
கடந்த ஏழு ஆண்டுகளில் தமிழர்களின் தலையாய பிரச்சினைக்களுக்காக குரல் கொடுத்திருக்காத இவர்கள் அனைத்துலக அரங்கில் சிங்களத்தை பிணையெடுக்க திரைமறைவிலும் வெளிப்படையாகவும் பணியாற்றிவந்துள்ளார்கள். இன்று அதே வேலையை தாயகப்பரப்பிற்குள் செய்து வருகின்றார்கள். இந்த தேசத்துரோகத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
காலத்திற்கு காலம் சிங்கள தேசத்தில் சர்வ வல்லமை பொருந்திய தலைமைகள் தனிப்பெரும்பான்மை பலத்துடன் உருவாகிவந்த போதிலும் இலங்கைத் தீவில் நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காண அவர்களால் முடியவில்லை. அதற்கும்இ அழகிய இலங்கைத் தீவு இரத்தக்களறியாக காட்சியளிப்பதற்கும் பௌத்த சிங்கள பேரினவாத மனநிலையில் ஊறித்திழைத்தவர்களால் ஆட்சி அதிகார பீடம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்பட்டு வருவதே காரணமாகும்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழர்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே காணாமல் செய்யப்பட்டிருந்த 146679 பேருக்குமான நீதியை பெற்றுக் கொடுப்பதிலும் சிறிலங்கா அரச தரப்பும் அவர்களுக்கு முதுகு சொறிந்து கொண்டிருக்கும் தமிழ்த் தலைவர்களும் தமது பொறுப்புக் கூறலை வேண்டுமென்றே தவிர்த்து வருகின்றார்கள். அதனை மறக்கடிக்கவே பல்வேறு திசைதிருப்பல்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
சிறிலங்கா சனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு படி மேலேசென்று பகிரங்கமாகவே இனப்படுகொலை குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்காவை விடுவிக்குமாறு அமெரிக்க சனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ட் இடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் அமெரிக்காவின் துணை சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மைக் பென்சுடன் மைத்திரி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
அந்த உரையாடலில் அமெரிக்க சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ட்ரம்ப் உடன் சந்திப்பை ஏற்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டதுடன் இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் பேசப்படும் போர்க்குற்றம் தொடர்பிலான விடயத்தை அப்படியே கைவிட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதியிடம் மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐ.நா சபையில் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை என்பதை நீக்கிவிட்டால் அதன் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதை முழுமையாகக் கைவிட்டு விட முடியும் எப்பதனாலேயே தமது அதீத கவனத்தை அவ்விடயத்தில் செலுத்திவருகின்றார்கள்.
பிளவுபடாத இலங்கை நாட்டிற்குள் அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து சமாதான சகவாழ்வு வாழ்வதற்கு வழியேற்படுத்தும் அற்புதங்கள் நிறைந்ததாக அரசியல் யாப்பு திருத்தத்தை மேடையேற்றும் அதே வேளை இனப்படுகொலை குற்றச்சாட்டில் இருந்து சிங்கள அரச தலைவர்களையும் இராணுவத்தினரையும் காப்பாற்றும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டு வருவதன் மூலம் அவர்களின் உண்மை முகம் அம்பலமாகிறது.
அவர்கள் கூறும் இலங்கை நாட்டின் குடிமக்களான காணாமல் ஆக்கப்பட்ட 146679 பேரிற்கும் பொறுப்புக்கூறாது இன நல்லிணக்கம் என்பது சாத்தியமில்லை. அதனைத் தவிர்த்து போலியான வார்த்தைகளை முன்னிறுத்திய அரசியல் யாப்பு திருத்தத்தை தமிழர்களின் ஒப்புதலோடு வெற்றிபெற வைக்கவே கடும் பிரயத்தனம் செய்துவருகின்றனர்.
பாதிப்பிற்குள்ளான தரப்பான தமிழர்களே மறப்போம் மன்னிப்போம் என்ற விட்டுக்கொடுப்பு நிலைக்கு வரவேண்டுமென்று நினைப்பது ஒருவகையில் சுயநலன் சார் எதேச்சதிகாரமேயாகும். அதைவிடுத்து உண்மையில் இன நல்லிணக்கத்தை விரும்புவர்கள் நடந்த இனப்படுகொலைக்கு பொறுப்புக் கூறுவதன் மூலமே அதற்கு அடித்தளத்தை ஏற்படுத்த முடியும்.
நடந்த இனப்படுகொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதுடன் தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு தமிழரின் தேசிய தனித்துவத்தை என்று அங்கீகரிக்கின்றார்களோ அன்றுதான் உண்மையான நல்லிணக்கம் என்பது சாத்தியமாகும்.
அன்பான தமிழ் மக்களே; எமது சுதந்திர வாழ்வின் இருதயமாக விளங்குவது வடக்கு-கிழக்கு இணைந்த தாயகமே. அதனை பிரித்து தனித்தனி அலகாக ஆக்குவதென்பது உடலில் இருந்து இருதயத்தை வெளியே எடுப்பதற்கு சமமாகும். தேச விடுதலையின் ஆன்மாவின் அத்திவாரத்தையே அசைக்கும் வடக்கு-கிழக்கு பிரிப்பை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதைவிடுத்து வடக்கு-கிழக்கு பிரிப்பிற்கு ஆதரவாக செயற்படுவது தேசத்துரோகமாகும்.
ஆகவே வடக்கு-கிழக்கு பிரிவு நிலையில் முன்வைக்கப்படும் எந்தவகைத் தீர்வாக இருப்பினும் அதனை நாம் இறுதிவரை முழுமையாக எதிர்ப்போம். தற்காலிக சலுகைகளுக்காக எமது உரிமைகளை நாம் இழப்பதானது பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு இருக்கும் நூல் வேட்டியையும் இழந்து ஒன்றுமில்லாமல் நிற்கும் அவல நிலைக்கே எம்மை இட்டு செல்லும்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!