யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பகுதிக்குட்பட்ட நீர்வேலி பூதர்மடப்பகுதியில் வீடொன்றில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த 6 இளைஞர்கள் கோப்பாய் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 119 மூலம் பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பூதர் மடத்தடிக்குச் சென்ற பொலிசாரால் வீடொன்றில் ஆறு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட போது குறித்த வீட்டில் இளைஞர்கள் மாத்திரம் இருந்துள்ள போது அவ்வீட்டில் வாள் ஒன்றும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட 6 இளைஞர்களும் இன்றையதினம் யாழ்ப்பாண நீதிமன்ற நிதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு கட்டைப்பிராய் பகுதியில் மூன்று இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து நள்ளிரவு அட்டகாசம் செய்தமை தொடர்பாக மேலும் இரு இளைஞர்கள் நேற்றிரவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுக்காலை விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் உரிமையாளனாகிய பாலச்சந்திரன் விநோஜன் கைதுசெய்யப்பட்டதையடுத்து ஏனைய இரு இளைஞர்களும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கட்டைப்பிராய் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் இதுவரை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் அச்சுவேலி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புத்தூர் சுன்னாகம் வீதியில் உள்ள வாகனத்திருத்தகம் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தைச்சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே திட்டமிட்டு வாள்களை வாகனதிருத்தகத்தினுள் வைத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாகனத்திருத்தக உரிமையாளருக்கும் குறித்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இடையிலுள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாக குறித்த திட்டமிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விசாரனையிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது காங்கேசன்துறை பொலிஸ்நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வாகன திருத்தகத்தில் பொலிஸ் உத்தியோகத்தரின் கோரிக்கைக்கு ஏற்ப வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களை வைத்தவர் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் வாள்களையும், கூரிய ஆயுதங்களையும் தயாரித்தவரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை ஆயுதங்களை வாகனதிருத்தகத்திற்குள் வைத்தவரும் தயாரித்தவரும் மல்லாகம் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது வாள்களைத் தயாரித்தவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வாள்களை மற்றும் கூரிய ஆயுதங்களை வாகனதிருத்தகத்திற்கு கொண்டுசென்று வைத்தவர் 14 நாள்கள் மல்லாகம் நீதவானால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புத்தூர் சுன்னாகம் வீதியிலுள்ள வாகனதிருத்தகத்தில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்கள் இருப்பதாக 119 பொலிசாருக்கு தகவல் கொடுத்தவரும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் என்றும் அறிய முடிகிறது.