நகர்ப்புற பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் புறநகர்ப்பகுதிகளில் பாடசாலைகளை மூடும் நிலையேற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி, முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள நூலகம், தொழில்நுட்ப ஆய்வுகூடத்துடனான மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
அருகில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இரண்டு கோடி ரூபா செலவில் இந்த நூலகம்,தொழில்நுட்ப ஆய்வுகூடத்துடனான மூன்று மாடிக்கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.