வடக்கு – கிழக்கில் காணி அபகரிப்பை ஆராய விஷேட பொலிஸ் பிரிவு – சந்திரசேன

193 0

வடக்கு – கிழக்கு காணி அபகரிப்பு தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து அதுதொடர்பில் ஆராய விஷேட பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

வடக்கு – கிழக்கு உட்பட பல மாகாணங்களிலிருந்தும் காணி அபகரிப்பு தொடர்பான முறைப்பாடுகள் பல கிடைக்கப்பெற்றுள்ளன.

பொதுமக்களுடைய காணிகள் கைத்தொழில் செயல்பாடுகள், வேறு வேலைத்திட்டங்கள், சுற்றுலாத்துறை செயல்பாடுகளுக்கு என அநாவசியமான முறையில் சூறையாடப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் நான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குத் தெரியப்படுத்தியதையடுத்து விஷேட பொலிஸ் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற சிரேஷ்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் சுனித் எதிரிசிங்கவின் தலைமையில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.

அண்மையில் காணி அபகரிப்பு தொடர்பில் கண்காணிப்பதற்கு திருகோணமலை மாவட்டத்துக்குச் சென்றிருந்தேன்.

இதன் போது எனக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஆராய்வதற்காக குறித்த விசாரணை குழுவினர் குச்சவெளி, நிலாவெளி ஆகிய பிரதேசங்களுக்குச் சென்றுள்ளனர்.

300 குடும்பங்கள் வரை வசிக்கும் குச்சவெளி பிரதேசத்துக்குச் சென்று அந்த பிரதேசத்தின் எரக்கண்டி பாலத்துக்கு அண்மையிலிருந்து சலப்பியாறு பாலம் வரையான பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைளை மேற்கொண்டிருந்தனர்.

அந்தப் பகுதியில் சுமார் 136 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால் 55 குடும்பங்களுக்கே அரசாங்கத்தால் காணி உறுதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 76 குடும்பத்தினர் சட்டவிரோதமான முறையில் வசித்து வருகின்றனர்.

14 குடும்பங்கள் தொடர்பில் எந்தவித தகவல்களும் வழங்கப்படவில்லை. இதனால் நாட்டில் அதிகளவான வரி வருமானம் இழக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.