பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்; கனடாவில் பெரும் சர்ச்சை

228 0

கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள், பிரதமர் மோடிக்கும், அங்கு பணியாற்றும் இந்திய துாதரக அதிகாரிகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து, சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, துாதரக அதிகாரிகளுக்கு, பாதுகாப்பை அதிகரிக்கும்படி, அந்த நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

நடவடிக்கை

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி எல்லைப் பகுதியில், விவசாயிகள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வட அமெரிக்க நாடான கனடாவில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக, காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர், ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் கலவரங்களை துாண்டும் வகையில் பேசி வருகின்றனர்.

கடந்த டிசம்பர், 26ம் தேதி, ஒட்டாவாவில் உள்ள இந்திய துாதரகம் மற்றும் வான்கூவரில் உள்ள துணை துாதரகத்தின் அதிகாரிகளுக்கு, கொலை மிரட்டல் வந்துள்ளன. இதையடுத்து, கனடா போலீசிடம், புகார்கள் அளிக்கப்பட்டது. எனினும், அதில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து, சமீபத்தில், வான்கூவர் துணை துாதரகத்திற்கு வெளியே, காலிஸ்தான் ஆதரவாளரான இந்தர்ஜித் சிங் பெயின்ஸ் என்பவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு, கொலை மிரட்டல் விடுத்தார்.

மற்றொரு பிரிவினைவாதியான நரிந்தர் சிங் கால்சா என்பவரின், ‘பேஸ்புக்’ பக்கத்தில் இருந்து, அந்த கொலை மிரட்டலுக்கான பதிவையும், இந்தர்ஜித் வெளியிட்டார். அது தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

latest tamil news

 

உத்தரவு

அந்த சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த நிலையில், கனடா வெளியுறவு துறை அமைச்சர் மார்க் கார்னியுவை, நம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.அதன் எதிரொலியாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்த விவகாரத்தில், சில நடவடிக்கைகளை உத்தரவிட்டுஉள்ளார்.

ஒட்டாவா மற்றும் வான்கூவரில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க, போலீசாருக்கு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையே, இந்த சம்பவங்கள் குறித்து விசாரித்து, கொலை மிரட்டல்கள் விடுத்த நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, கனடா வெளிஉறவு துறை அமைச்சகத்திற்கு, இந்திய துாதரகம் கடிதம் எழுதியுள்ளது.