திமுக கூட்டணிக்கு வரும்படி கமலுக்கு ஸ்டாலின் அழைப்பு

236 0

‘எங்கள் கூட்டணிக்கு, மக்கள் நீதி மையம் வந்தால் பார்ப்போம்; பேசுவோம்,” என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திடீரென அழைப்பு விடுத்துள்ளார்.

தனியார், ‘டிவி’ சேனலுக்கு, அவர் அளித்த பேட்டி: சசிகலா வருகையால், அ.தி.மு.க.,வுக்கு ஆபத்து இருக்கலாம்; தி.மு.க.,வுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது ஜெயலலிதா தான். முதல்வர் இ.பி.எஸ்., மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை; எம்.எல்.ஏ.,க்கள் தான் தேர்ந்தெடுத்தனர். சசிகலாவால் நியமிக்கப்பட்டு, முதல்வராக ஆட்சிக்கு வந்தவர் அவர்.

தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி உடைய வேண்டும் என்பது, பா.ஜ., முருகனின் ஆசை; உடைய வாய்ப்பே கிடையாது. சோனியா – ராகுலிடம் நான் இணக்கமாகவே இருக்கிறேன்; எந்த பிரச்னையும் கிடையாது. காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்கி தருவதிலும், பிரச்னை இருக்காது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே, மக்கள் நீதி மையம் கூட்டணிக்கு வருவது குறித்து பேச வேண்டும். மக்கள் நீதி மையம் வந்தால் பார்ப்போம்; பேசுவோம். கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறோம் என்றால், அதில், நாங்கள் குறுக்கிட மாட்டோம்; உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என, யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம். அது, அவர்களின் விருப்பத்தை பொறுத்தது.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.