‘கொரோனா’ விடுமுறையில் இயற்கை விவசாயம் கற்ற மாணவ-மாணவிகள்

209 0

திருச்சி அருகே 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான 35 மாணவ, மாணவிகள் இயற்கை விவசாயத்தை கற்று கொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்கி, தங்களையும், பெற்றோரையும், கிராமத்தையும் பெருமைப்படுத்தி உள்ளனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. ஒரு சில மாதங்களுக்கு பிறகு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இந்த வசதியை கிராமப்புற மாணவர்கள் முழுமையாக பெற முடியவில்லை.

10 மாதங்கள் வரை தொடர்ந்த இந்த விடுமுறையால் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்கும் முறையையே மறந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் இருந்தனர். படிப்படியாக குறைந்த கொரோனா தொற்றால் சற்றே நிம்மதி அளிக்கும் வகையில் முதற்கட்டமாக கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கின.

இதையடுத்து 10 மற்றும் 12-ம் வகுப்புகளும், இன்று முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா விடுமுறை காலத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கழித்துள்ளனர். பெரும்பாலானோர் வீடுகளில் முடக்கப்பட்டதால் வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை.

ஆனால் கிராமப்புறங்களை பொறுத்தவரை மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாய பணிகளை மேற்கொள்வது, ஓவியம், நடனம், தற்காப்பு கலை உள்ளிட்ட பயிற்சிகளை பெறுவது, கலைகளில் நாட்டம் செலுத்துவது என்று செலவிட்டனர்.

அந்த வகையில், திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சிறுகனூர் கிராமத்தைச் சேர்ந்த 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான 35 மாணவ, மாணவிகள் இயற்கை விவசாயத்தை கற்று கொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்கி, தங்களையும், பெற்றோரையும், கிராமத்தையும் பெருமைப்படுத்தி உள்ளனர்.

இந்த மாணவ, மாணவிகள் விடுமுறையின்போது வாரத்தில் 6 நாட்களும் ஆன்லைனில் பள்ளி பாடங்கள் படித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் தனியார் அறக்கட்டளை சார்பில் இயற்கை முறையில் விவசாயம் செய்வது எப்படி என்று நடத்தப்படும் வகுப்பில் சேர்ந்துள்ளனர்.

அந்த வகுப்பில் மாணவர்களுக்கு விவசாயத்தில் ரசாயன உரங்களை தவிர்த்து சத்தான உணவுகளை விவசாயத்தில் உற்பத்தி செய்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் கற்றுக்கொடுத்தனர். பின்னர் அவர்களுக்கு 10 வாரங்கள் விவசாய கள பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் இந்த பயிற்சி முடித்தபோது ஒவ்வொரு மாணவருக்கும் அறக்கட்டளை சார்பில் தக்காளி, கத்தரி, அவரை, மிளகாய் உள்ளிட்ட 10 விதமான காய்கறிகளின் விதைகள் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த விதைகளை வீட்டிற்கு வாங்கி வந்த மாணவ-மாணவிகள் தங்களின் வீடுகளின் பின்னால் பெற்றோரின் ஆதரவுடன் சிறிய தோட்டம் அமைத்து இயற்கையான முறையில் தங்களின் வீடுகளுக்கு தேவையான காய்கறிகளை தயார் செய்து வருகின்றனர்.

இது குறித்து 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி புரட்சிபாரதி கூறுகையில், நாங்கள் எங்களின் வீடுகளில் தயார் செய்யும் காய்கறிகள் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கிறது. முற்றிலும் இயற்கை உரங்களான மண் புழு, மாட்டு சாணம், அழுகிய காய்கறிகள், இலை, தழைகள் உள்ளிட்ட உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்கிறோம்.

எங்களுக்கு எங்கள் பெற்றோர் முழு ஆதரவு வழங்குகிறார்கள். மற்ற கடைகள் சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் கிடைக்கும் காய்கறிகளை விட நாங்கள் தயார் செய்பவை புதுப்பொலிவுடன் உள்ளது.

நாங்கள் கடந்த 10 வாரங்களாக படித்த இயற்கை விவசாய வழிமுறைகளை தற்போது எங்களின் கடைபிடித்து அதன் பலனையும் அனுபவித்து வருகிறோம். கொரோனா விடுமுறையில் முதலில் டி.வி. பார்ப்பது, விளையாட்டு விளையாடுவது, போன்றவற்றை பொழுதுபோக்காக வைத்திருந்தாலும், தற்போது இயற்கை முறையில் விவசாயம் செய்வதை எங்களின் பொழுதுபோக்காக மாற்றி இருக்கிறோம். விவசாயிகளும் முற்றிலும் ரசாயன உரங்களை தவிர்க்க வேண்டும் என்றார்.

இதேபோல், 7-ம் வகுப்பு மாணவன் வசந்த் கூறுகையில், எங்களின் குடும்பமே விவசாய குடும்பம் தான். மேலும் நான் மிளகாய் பயிரிட்டுள்ளேன். இந்த மிளகாய் மிகவும் இயற்கையான முறையில் தயாரானது. நாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எங்கள் வீட்டில் சமையல் செய்வதற்காக மட்டும்தான் பயன்படுத்துகிறோம் என்றார்.

மொத்தத்தில் இயற்கை விவசாயம் என்றுமே சிறந்தது என்பதை பெற்றோர்கள் ஆதரவுடன் மெய்ப்பித்து காட்டி இருக்கிறார்கள் இந்த சிறுகனூர் கிராம மாணவ, மாணவிகள்.