சசிகலா வந்தவுடன் நடக்க வேண்டியது நடக்கும் – மு.க.ஸ்டாலின் பேச்சு

219 0

சசிகலா வந்தவுடன் நடக்க வேண்டியது நடக்கும் என்று புதுக்கோட்டையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன் மகள் சங்கத்தமிழ் மற்றும் பரத் முத்துதங்கம் ஆகியோரின் திருமணம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அய்யனார் கோவில் திடலில் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்த பின் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
புதுக்கோட்டை சந்திரசேகரன் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்து தி.மு.க.விற்காக உழைத்தார். சுயமரியாதை திருமணத்தை அண்ணா சட்டமாக்கினார். அதன்பிறகு தமிழகத்தில் பரவலாக சுயமரியாதை திருமணங்கள் நடக்க தொடங்கியது. கொரோனா காலம் என்பதால் கடந்த சில மாதங்களாக காணொலிக்காட்சி மூலம் சுமார் 150 சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்தேன்.
இன்னும் 3 மாதத்தில் தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் என்ன முடிவு வரும் என்று அனைவரும் அறிந்ததே. நாம் தான் ஆட்சியை பிடிப்போம். அதற்கு ஏற்றார்போல் விடியலை நோக்கி, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பிரசார பயணத்திற்கு வியூகங்ககளை அமைத்து 234 தொகுதிகளுக்கும் சென்று மக்கள் குறைகளைக் கேட்க முடிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக 34 தொகுதிகளில் பிரசாரத்தை முடித்துள்ளோம்.
இரண்டாம் கட்டமாக சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சியுடன் 37 தொகுதிகளுக்கு சென்று வந்துவிட்டேன்.
இதுவரை இரு கட்டமாக 71 தொகுதிகளில் முடித்துள்ளோம். முன்பு 200 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்து வந்தேன். ஆனால் தற்போது நாம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு ஆட்சி நடக்கிறது. அவர் எப்படி முதல்-அமைச்சரானார் என்று பேசினால் அவருக்கு கோபம் வந்துவிடும். தவழ்ந்து வந்தது என்பது உண்மையா இல்லையா? தவழ்ந்த வீடியோ வாட்ஸ்-அப்பில் வந்ததா இல்லையா? அவர் இல்லை என்றால் நான் இதனை வாபஸ் வாங்குகிறேன்.
இதோ பெங்களூருவில் இருந்து வந்தாச்சு, அ.தி.மு.க. கொடியுடன் சசிகலா வந்துகொண்டு இருக்கிறார். வந்தவுடன் என்ன நடக்கப் போகுது என்று தெரியவில்லை, ஆனால் நடக்க வேண்டியது நடக்கும், அதில் எந்த மாற்றமும் கிடையாது. வீட்டில் விளக்காகவும், நாட்டில் தொண்டர்களாகவும் மணக்கள் வாழ வேண்டும் என குறிப்பிட்டார்.