மட்டக்களப்பு பொதுநூலக நிர்மாணப் பணிகள் தீவிரம்- முதல்வர் உள்ளிட்ட குழு நேரில் ஆராய்வு!

256 0

மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பொதுநூலகத்தின் மேற்தளப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபையின் உறுப்பினர் வே.தவராஜா, சீ.ஜெயேந்திரகுமார் ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது, மட்டு. மாநகர முதல்வர் குறிப்பிடுகையில், “2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2012ஆம் ஆண்டில் இடைநடுவில் நிறுத்தப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகக் கட்டடப் பணிகளுக்கான உரிய அனுமதிகளையும், அதற்குரிய நிதியையும் கடந்த நல்லாட்சிக் காலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் உதவியுடன் பெற்றுக் கட்டிடங்கள் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து, தற்போது நிர்மானப் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

அத்துடன், கட்டட நிர்மாணத்துக்காக 345 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டு, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மூலமாக 169.87 மில்லியனும் அப்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம ஊடாக மாகாண சபையிலிருந்து 100 மில்லியனும் மிகுதிப் பணத்தினை மாநகர சபையும் ஒதுக்குவதென்ற தீர்மானத்தில் 2019ஆம் ஆண்டு தேசியக் கட்டடங்கள் திணைக்களத்துக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, “மட்டக்களப்பு மாநகர சபையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பொறுப்பேற்ற பின்னர் மிக வேகமாகச் செயற்பட்டு, உரிய நிதியைப் பெற்று இந்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட ஒப்பந்தக்காரர் இந்த வேலையைச் சரியான முறையில் செய்து வருவதோடு, இதனைத் தேசிய கட்டடங்கள் திணைக்களம் முழுமையாகக் கண்காணித்து வருவதால் அந்தக் கட்டிட வேலைகளை 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னர் முடிவுறுத்தித் தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது” என பிரதி முதல்வர் க.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிர்மாண வேலைகளை முடிக்கத் தேவையான மிகுதிப் பணமானது, மாநகர சபையின் நிதியிலேயே செலவிடப்படவுள்ளதால் அதனை தற்போதைய ஆளுங்கட்சியில் உள்ள இராஜாங்க அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் பொறுப்பேற்று இதற்குரிய நிதி ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டும் என அவர் கோரியுள்ளார்.