மியான்மரில் ராணுவ ஆட்சி – இரண்டாவது நாளாக நீடிக்கும் மக்கள் போராட்டம்

215 0

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக யாங்கூன் நகரில் இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.

மியான்மரில் நடந்து முடிந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டி வந்த ராணுவம்  கடந்த 1-ம் தேதி ஆட்சியை கைப்பற்றியது. அத்துடன் ஆங் சான் சூ கியையும், அந்த நாட்டின் அதிபராக இருந்து வந்த வின் மைன்டையும் கைது செய்து வீட்டுச்சிறையில் தள்ளியது. ஓராண்டு கால நெருக்கடி நிலையையும் அறிவித்தது.
இதற்கிடையே, ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டின் மக்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர். வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்துகின்றனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கி உள்ளனர். அரசு ஊழியர்களும், சுகாதார பணியாளர்களும் நடத்துகிற ஒத்துழையாமை இயக்கத்தில் பல தரப்பினரும் சேர்ந்து வருகின்றனர். இது ராணுவ ஆட்சிக்கு தலைவலியாக மாறி வருகிறது.
இந்நிலையில், மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக யாங்கூன் நகரில் இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
மியான்மரின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான யாங்கூனில் மக்கள் பெருந்திரளாக கூடி, ராணுவ ஆட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். ஆங் சான் சூ கி உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும் யாங்கூனில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை நடத்தி அதிர வைத்தனர்.