ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க புதிய ஆணையம்- மு.க.ஸ்டாலின் பேட்டிஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க புதிய ஆணையம்- மு.க.ஸ்டாலின் பேட்டி

246 0
பா.ஜ.க.வுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்றும், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்றும் தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘தந்தி’ டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க புதிய ஆணையம் அமைக்கப்படும். தற்போதுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் வெறும் கண் துடைப்பு. இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டிய கடமை எங்களுடையது. தற்போது உள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
சசிகலா வருகை அ.தி.மு.க.வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால்தான், ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில் அவசரமாக மூடப்பட்டிருக்கிறது. ஒருவேளை சசிகலாவை எதிர்கொள்ள தயாராக இருந்திருந்தால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவிடத்தை மூடியிருக்கக்கூடாது. ஜெயலலிதா மீது எனக்கு அரசியல் ரீதியான விமர்சனங்கள் இருந்தாலும் அவரது தைரியமான முடிவுகள் பாராட்டுக்குரியது.
நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட மதசார்பற்ற கூட்டணி தொடரும். மெகா கூட்டணியாக இருந்தாலும், கொள்கை ஒன்றாக இருப்பதால் சிரமத்தை பொறுத்து, தொகுதிகள் ஒதுக்கப்படும். ராகுல்காந்தியின் தமிழக பிரசாரம் கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும். தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தற்போதுவரை இல்லை. தே.மு.தி.க.வுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. கொள்கை வேறுபாடு காரணமாக பா.ஜ.க.வுடன் எதிர்காலத்திலும் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை.
அதேசமயம் அரசியல் வேற்றுமை கடந்து எனக்கு பிரதமர் மோடியிடம் நல்ல நட்பு இருக்கிறது. மோடி தொலைபேசியில் என்னை தொடர்புகொள்ளும் போதெல்லாம், எனது தாயார் குறித்து நலம் விசாரிப்பார். உதயநிதி ஸ்டாலின் பல தேர்தல் பணிகளில் ஈடுபட்டதாலும், திரை நட்சத்திரம் என்பதாலும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்குமான அரசியல் ரீதியிலான உறவு தொடர்கிறது. கருணாநிதி மறைந்தபோது, மெரினாவில் இடம் கொடுக்குமாறு கேட்டும், தர மறுத்தது குறித்த கோபம் எனக்கு இருக்கிறது. சட்டமன்றத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக, முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
பிரதமர் பதவி நாடி வந்தும் வேண்டாம் என மறுத்தவர் சோனியா காந்தி. நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதிக்கு மிகவும் பிடித்த நண்பர். கமல்ஹாசன் நல்ல நடிகர். பிரதமர் மோடி அருமையான பேச்சாளர். எழுச்சி வரக்கூடிய அளவுக்கு திறமையாக பேசக்கூடியவர். விஜயகாந்த் மனிதநேயம் மிக்கவர். டாக்டர் ராமதாஸ் சிறந்த போராளி. ஜெயலலிதா தைரியசாலி. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு சிம்ம சொப்பனம். ராகுல்காந்தி இந்தியாவின் வளர்ந்து வரும் மாபெரும் தலைவர். மு.க.அழகிரி என்னுடைய அண்ணன்.
இவ்வாறு அவர் கூறினார்.