மாபெரும் எழுச்சியுடன் நிறைவடைந்த ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ பேரணி!

264 0

தமிழ் பேசும் மக்கள் மீது சிங்களப் பெரும்பான்மை அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளை எதிர்த்து முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி சிங்கள பேரினவாதத்தின் தடைகளை உடைத்தெறிந்து இன்று மாலை பொலிகண்டியில் நிறைவடைந்தது.

தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகள், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின்உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாகஅதிகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 3ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் பொத்துவிலிலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டம் பொலிகண்டியை நோக்கிய பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.

சிவில் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகள், பொது அமைப்புக்கள் இணைந்து இந்த பேரணிக்கு அழைப்பு விடுத்தன.

பேரணியால் கொரோனா தொற்றுப் பரவும் அபாயமுள்ளது எனச் சுட்டிக்காட்டி அம்பாறை மற்றும் மட்டக்களப்பு நீதிமன்றங்களில் பொலிஸாரால் பேரணியில் பங்கேற்பார்கள் என அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு தடை உத்தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

நீதிமன்ற தடைகளை மீறி திட்டமிடப்பட்ட முறையில் கடந்த 3ஆம் திகதி நீதிகோரிய பேரணி பொலிகண்டி நோக்கிப்பயணத்தை ஆரம்பித்தது.முதலாவது நாள் பேரணி மட்டக்களப்பு தாழங்குடாவில் நிறைவடைந்தது.

தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் பேரணிகள் மட்டக்களப்பு மாவட்ட பிரதேசங்கள் ஊடாக திருகோணமலையைஅடைந்தது.

சிங்கள இராணுவத்தின் வீதி மறியல்கள் ,பேரணி வரும் வீதிகளில் ஆணிகளை வைத்து  பேரணியை தடுத்து நிறுத்தும் மிக மோசமான முயற்சிகள், இடம்பெற்றன.

திருகோணமலை மாவட்டத்திலிருந்து முல்லைத்தீவு மாவட்டம் நோக்கி நகர்ந்தது.முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கு பேரணியாகச் சென்றவர்கள் அஞ்சலி செலுத்தி அங்கிருந்துவவுனியா நோக்கிச் சென்று வவுனியாவில் மூன்றாவது நாள் பேரணி நிறைவடைந்தது.

வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கிய பயணம் 4ஆவது நாளான நேற்று இடம்பெற்று ஏ -32 வீதியூடாக ஏ- 9 வீதியை அடைந்துகிளிநொச்சியில் பேரணி நிறைவடைந்தது.

பேரணியின் 5ஆவது நாளான இன்று காலை கிளிநொச்சியிலிருந்து ஏ- 9 வீதி ஊடாக யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்து,தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் சேர்ப்பதற்காக முள்ளிவாய்க்காலில் சேகரிக்கப்பட்ட மண், பல்கலைக்கழக முன்றலில் வைத்து மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன் பின்னர் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை வந்தடைந்த பேரணி அங்கு அஞ்சலி செலுத்திய பின் பொலிகண்டி நோக்கிய பயணத்தை ஆரம்பித்திருந்தது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதி ஊடாக பேரணி பருத்தித்துறை நகர் நோக்கிப் பயணித்த போது கோப்பாய், நெல்லியடி ஆகிய நகரங்களில் திரண்ட மக்கள் தமது ஆதரவை நல்கினர்.

பருத்தித்துறை நகரிலிருந்து, பருத்தித்துறை பொன்னாலை வீதியூடாக பொலிகண்டியை சென்றடைந்து, பேரணி நிறைவடைந்தது. பொது அமைப்புக்களுடன் இணைந்து மக்களும் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உலர் உணவுகளை வழங்கி தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் பேரணிகள் நடத்த நீதிமன்றம் தடை பெற்றுக்கொள்ளப்பட்;டிருந்த நிலையில்  அகிம்சை வழிப் பேரணியைத் தடுக்க மந்திகை மடத்தடியில் வீதி மறியல் செய்து பொலிஸார் தடை ஏற்படுத்திய போதும் மக்கள் எழுச்சி அதனை உடைத்து முன்னெறியது.

இருப்பினும் அனைத்து தடைகளையும் தகர்த்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி நிறைவடைந்தது.

அத்துடன் மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான
மரபுவழித் தாயகம்
சுயநிர்ணய உரிமை
தமிழ்த்தேசியம் என்பன அங்கீகரிக்கப்படவேண்டும்.
அத்துடன், தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற இனவழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும்.
இதன்பால் தொடர்ச்சியாக ஜனநாயக வழியில் போராடுவோம் என உறுதி எடுத்துக்கொள்கிறோம்.

இந்தப்பேரணியில் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், தமிழ் மக்கள் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

இதேவேளை, வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;