தஞ்சையில் அ.தி.மு.க. பிரமுகர் மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரூ. 2 லட்சம் செலவில் கோவில் கட்டி உள்ளார்.
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டு உள்ளது.தமிழகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சையில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டி உள்ளார். தஞ்சை மேல வீதியை சேர்ந்தவர் சாமிநாதன். 18-வது வார்டு முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர்.
தஞ்சை மாநகராட்சி கொறடாவாகவும் இருந்து வந்தார். இவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு தஞ்சை மேல வீதி கொங்கணேஸ்வரர் கோவில் அருகில் ரூ. 2 லட்சம் செலவில் கோவில் கட்டி உள்ளார்.
இது குறித்து அவரிடம் கேட்ட போது கூறியதாவது:-என்னை போன்ற சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அவரது மறைவு என்னை மிகவும் பாதித்தது.இதையடுத்து மேலவீதியில் கடந்த 7-ந் தேதி அவருக்கு கோவில் கட்டும் பணியை தொடங்கினேன்.இதில் ஜெயலலிதா படமும் இரு புறமும் அண்ணா, எம்.ஜி.ஆர். படங்களும் வைக்கப்பட உள்ளது. விரைவில் 2 அடியில் ஜெயலலிதாவின் வெண்கல சிலை வைக்கப்படும்.
மேலும் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பிறந்த நாள், நினைவு நாட்களில் அன்னதானமும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது. இந்த கோவிலை தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வைத்திலிங்கம் எம்.பி. ஒரிரு நாட்களில் திறந்து வைக்க உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.