அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக ரெக்ஸ் டில்லர்சன் என்பவரை அந்நாட்டின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று வரும் ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தனது தலைமையிலான ஆட்சியில் இடம்பெறவுள்ள மந்திரிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளை தேர்வு செய்து வருகிறார்.
அவ்வகையில், அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத்துறை மந்திரியாக ஜேம்ஸ் மாட்டிஸ் என்பவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக ரெக்ஸ் டில்லர்சன் என்பவரை அந்நாட்டின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தேர்வு செய்துள்ளார்.
அமெரிக்காவின் மிக பிரபலமான தொழிலதிபரும், எக்ஸான் மொபைல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் விளங்கிவரும் ரெக்ஸ் டில்லர்சன், இதற்கு முன்னர் ஹிலாரி கிளிண்டனும் தற்போது ஜான் கெர்ரியும் வகித்துவரும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி பதவியை டிரம்ப் ஆட்சியின்கீழ் நிர்வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் மிகப் பிரபலமான தொழிலதிபர் என்ற முறையில் உலக நாடுகளில் உள்ள அதிமுக்கிய தலைவர்களுடன் நட்பு வைத்துள்ள ரெக்ஸ் டில்லர்சன், அமெரிக்காவின் பகைநாடான ரஷியாவின் அதிபராக பதவி வகிக்கும் விளாடிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படுகிறது.