துபாயில் தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அதிகரிப்பு- சுகாதார ஆணைய அதிகாரி தகவல்

191 0

துபாய் நகரில் தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அதிகரித்துள்ளது என துபாய் சுகாதார ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை செயல் அதிகாரி டாக்டர் மனால் தர்யம் கூறியதாவது:-

துபாயில் 2019-ம் ஆண்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனை வழங்கும் சேவை தொடங்கப்பட்டது.

இந்த சேவையானது 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் நடந்து வருகிறது. இந்த சேவையை பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா பாதிப்பின் காரணமாக இந்த சேவையை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனையை 83ஆயிரம் பேர் பெற்றுள்ளனர்.

இதில் கொரோனா பாதிப்புக்குள்ளான 7 ஆயிரத்து 251 பேர் மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர். மேலும் 13,437 பேர் கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவை தொடர்பான ஆலோசனைகளை பெற்றனர்.

தொடர்ந்து இந்த மருத்துவ ஆலோசனைகளை பெறுபவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த ஆலோசனையை வழங்குவதற்காக 52 மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆரம்ப கட்டத்தில் இந்த ஆலோசனையை 10 மருத்துவர்கள் மட்டுமே வழங்கினர்.

இந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக 6 மையங்கள் ஆரம்பத்தில் இருந்தது. தற்போது இது 16-ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆலோசனை பெறுபவர்கள் சுகாதார ஆணையத்தின் செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த செயலியின் மூலமாகவும் தொடர்ந்து சுகாதாரம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த தொலைபேசி வழியான மருத்துவ ஆலோசனையில் குடும்ப நலம் மற்றும் கொரோனா குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.